திமுக ஆட்சியில் அரசு அலுவலர்களின் உயிருக்கே ஆபத்தா?

Update: 2024-06-18 13:57 GMT

திமுக ஆட்சியில் கேள்விக்குறியான அரசு அதிகாரிகளின் பாதுகாப்பு: 

கடந்த 2021 தேர்தலில் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை அமைத்தது. ஆட்சி பொறுப்பை ஏற்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளை திமுக நிறைவு செய்துள்ள நிலையில், தொடர்ந்து அரசு ஊழியர்களின் உயிருக்கு ஆபத்தான நிலையே நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக மணல் கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கு தொடர் கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. அதாவது கடந்த 2021 ஆண்டு ஜூலையில், திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உடனேயே, திருச்சி முத்தப்புடையன்பட்டியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தை போலீசார் மீட்டுச் சென்ற நிலையில் அவற்றை விடுவிக்க வேண்டும் என போலீசாரையே திமுக நிர்வாகி ஆரோக்கியசாமி மிரட்டினார். 

திருச்சி துறையூர் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது தாக்குதல்: 


இதனை அடுத்து திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வரும் திமுகவைச் சேர்ந்த மகேஸ்வரன் நரசிங்கபுரம் கிராமத்தை ஒட்டியுள்ள பச்சைமலை பகுதியில் இருந்து இரவு நேரங்களில் ஜேசிபி மூலம் செம்மண் கடத்தியுள்ளார். இதனைத் தெரிந்து கொண்ட அப்பகுதி மக்கள் துறையூர் வட்டாட்சியர் வனஜாவிற்கு செல்போன் மூலம் புகார் அளிக்க, அவர் ராமநாதபுரத்தை சேர்ந்த துறையூர் பகுதி வருவாய் ஆய்வாளர் பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்தார். அதனால் சம்பவம் நடந்த இடத்திற்கு உடனே விரைந்த பிரபாகரன் ஜேசிபி எந்திரம் மற்றும் டிராக்டரின் சாவியை எடுத்துக்கொண்டு கிராமத்திற்குள் வந்துள்ளார். கிராமத்திற்குள் வந்தவரை வழி மறித்த ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் மற்றும் சிலர் வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை ஆபாசமாக பேசியதோடு, அவரை ஆயுதங்களால் கடுமையாகவும் தாக்கியுள்ளனர். இதனால் அவரது மண்டை உடைந்தது, முதுகு பகுதியில் கடுமையான காயத்தால் அவதிபட்டார். 

அரசு அலுவலகத்திற்கு உள்ளே விஏஓ கொலை:

இதற்கு முன்பாகவே தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளை பற்றி புகார் அளித்ததற்காக, அவரது அலுவலகத்திற்குள்ளே சென்று திமுக நிர்வாகிகள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதற்குப் பிறகாவது இந்த சம்பவங்கள் எல்லாம் நிறுத்தப்பட்டதா என்று பார்த்தால் அதுவும் இல்லை தொடர்ச்சியாக அரசு அதிகாரிகள் மீதான கொலை மிரட்டலும், தாக்குதல்களும் அதிகரித்துக் கொண்டே சென்றது. அந்த வரிசையில், வாணியம்பாடியை அடுத்த தேங்காய்பட்டறை பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி கடத்தப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு வந்த புகாரை அடுத்து, அவரது உத்தரவின் பேரில் வாணியம்பாடி தாசில்தார் மோகன் சம்பவ இடத்திற்கு சென்று, அத்துமீறி ஆதி திராவிட நலத்துறை மூலம் அளிக்கப்பட்ட வீட்டுமனை பகுதிக்கு அருகே 10 அடி ஆழம் வரை தோண்டப்பட்டதை கண்டுபிடித்து, பொக்லைன் எந்திரத்தை தாசில்தார் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால் பொக்லைன் எந்திர டிரைவர் பிரகாசம் மற்றும் துறையயேறி பகுதியை சேர்ந்த வி.சி.அன்பரசு மற்றும் அவரது தம்பி சிவகுமார் ஆகியோர் பொக்லைன் எந்திரத்தை ஏன் பறிமுதல் செய்தீர்கள் என்று தாசில்தார் வந்த ஜிப்பை வழி மறித்ததோடு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். 

ஆளும் கட்சியின் விழாவில் பெண் காவலருக்கு நடந்த அநீதி:


இதனை தொடர்ந்து கடந்த வருடம் டிசம்பர் 31ம் தேதி சென்னை விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்பொழுது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் திமுக இளைஞரணியை சேர்ந்த இருவர் பாலியல் அத்துமீறில் ஈடுபட்டதும் இந்த திமுக ஆட்சியில் தான். 

எதிர்க்கட்சிகள் கண்டனம்:

இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி, திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலர்களை திமுக நிர்வாகிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். அதுவும் காவல்துறைக்கு முதல்வர் பொறுப்பாளராக இருக்கும் பொழுதே இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் சாதாரண பெண்களின் பாதுகாப்பு என்பது திமுக ஆட்சியில் கேள்விக்குறியாகி உள்ளதை இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்று கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை கைது செய்ய காவல்துறையினர் முற்பட்ட பொழுதும், திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உச்சகட்ட அவலம். திமுக எம்.பி.,கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் இவ்வாறு திமுக நிர்வாகி நடந்து கொண்டது அதிகார மமதையின்  வெளிப்பாடாகவே தெரிகிறது என விமர்சனம் செய்திருந்தார். 

நேற்றைய தின அவலங்கள்:

இந்த நிலையில் நேற்றைய தினம், புதுக்கோட்டையில் மணல் கடத்தலை தடுத்த கோட்டாட்சியரை லாரி ஏற்றி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதோடு, அதிகாரியை கொடூரமாக தாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்கு, மணல் கடத்தலை தடுத்த அரசு அதிகாரியின் மீது கொடூர தாக்குதல் நடத்த முயன்றோர் கைது செய்யப்பட வேண்டும். திமுக ஆட்சியில் அதிகாரிகள் மீது கொலை வெறி தாக்குதல் நடப்பது வாடிக்கையாகிவிட்டது என எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, பணியை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பெண் காவலர் தில்லி ராணி மீது பட்டப் பகலில் அரிவாள் வீச்சு நடந்துள்ளது. அதுவும் அவர் சீருடைகள் இருக்கும் பொழுதே இந்த தாக்குதல் நடந்துள்ளது. மேலும், இனியாவது மாய உலகில் இருந்து வெளிவந்து சட்ட ஒழுங்கை பேணி காப்பதற்கான நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என பெண் காவலர் தில்லிராணி தாக்கப்பட்ட விவகாரத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி கண்டனத்தை முன் வைத்துள்ளார். 

அண்ணாமலையின் கண்டனம்:

மேலும், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில், மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற கோட்டாட்சியர் திருமதி.தெய்வநாயகி மற்றும் அவரது உதவியாளர்கள் பயணம் செய்த வாகனம் மீது, லாரி ஏற்றிக் கொல்ல முயன்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. 

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகம் முழுவதும் சமூக விரோதிகளின் அராஜகம் அதிகமாகியிருக்கிறது. மணல் கடத்தலை எதிர்த்த கிராம நிர்வாக அலுவலர் திரு.லூர்து பிரான்ஸிஸ் அவர்கள், தனது அலுவலகத்திலேயே வைத்து மணல் கடத்தல்காரர்களால் கொலை செய்யப்பட்டார். இது போன்ற குற்றச் சம்பவம் நிகழ்ந்த பின்னர் கூட, திமுக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறியதால், தொடர்ந்து சேலம், வேலூர் என மணல் கடத்தல்காரர்கள் அரசு அதிகாரிகளைத் தாக்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

அரசு அதிகாரிகளின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு படுகுழியில் விழுந்து கிடக்கிறது. தமிழகம் முழுவதும் ஆயுத கலாச்சாரம் நிலவுகிறது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு, அதன் செயல்பாடுகள் முழுமையாக முடக்கப்பட்டிருக்கின்றன. மணல் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், ஊடகங்களை மிரட்டி, செய்திகளைப் பொதுமக்களிடம் இருந்து மறைக்கும் முயற்சியில்தான் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. ஆனால் இவை பற்றி எதுவுமே அறியாமல், கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அரசின் தலையாய கடமையான சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதில், திமுக அரசு முழுமையாகத் தோல்வியுற்றிருக்கிறது. திமுக அரசு இனியும் விழித்துக் கொள்ளாவிடில், பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, பொறுப்பான எதிர்கட்சியாக தமிழக பாஜக மாநிலம் தழுவிய போராட்டங்களில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது கண்டனத்தை வலிமையாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். 


Tags:    

Similar News