மகாராஷ்டிராவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.. தமிழகத்தில் எப்போது? தி.மு.க வாக்குறுதி என்ன ஆனது?
இந்தியாவில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் தினமும் மளிகைக்கடைக்கு செல்லும்போது எடுத்துச்செல்லும் பணத்தை காட்டிலும், பெட்ரோல் நிலையங்களுக்கு அதிக பணத்தை எடுத்துச்செல்ல வேண்டிய அளவுக்கு அவற்றின் விலை மிகுதியாக உள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றப்படுகின்றன. பெட்ரோல் விலை தினமும் நிர்ணயிக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்பட்டால், அது அதிகப்படியாக இருக்கும். இது மக்களுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். இந்த அதிக விலை குறிப்பாக வாகன ஓட்டிகளுக்கு மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது.
பெட்ரோல், டீசலின் விலை எப்போது குறையும்?
இந்தியாவில் உள்ள அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் கவலையளிக்கக் கூடிய விஷயமாக பெட்ரோல், டீசல் விலை உள்ளது. மேலும், பெட்ரோல், டீசலின் விலை எப்போது குறையும்? என்பது பல நடுத்தர வர்க்கத்தினரின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த மாதிரியான சூழலிலேயே பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் விதமாக அதற்கு விதிக்கப்படும் வரியை குறைத்து மஹாராஷ்டிரா மாநில அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்து இருக்கின்றது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை குறைத்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மஹாராஷ்டிரா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் பெட்ரோல் லிட்டருக்கு 65 காசுகள் வரையிலும், டீசல் லிட்டருக்கு 2.60 ரூபாய்களும் குறைய இருக்கின்றது. மேலும் 2024 ஜூலை 1 முதலே மஹாராஷ்டிரா அரசின் வாட் வரி குறைப்பு அமலுக்கு வர உள்ளது கூடுதல் தகவல். மேலும் தமிழகத்திலும் இது போன்று பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வாய்ப்பு இருக்கிறதா? என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ஏனென்றால் திமுக தங்களுடைய தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான பெட்ரோல், டீசல் விலையை குறைக்குமா? என்ற கருத்தும் தற்போது தமிழகத்தில் எழுந்து இருக்கிறது.
தி.மு.கவின் தேர்தல் அறிக்கை:
2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் திமுகவின் முக்கிய வாக்குறுதி பெட்ரோல், டீசல் விலை குறைப்பு ஆகும். குறிப்பாக அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4ம் குறைக்கப்படும் என்று கூறினார்கள். பிறகு மீண்டும் 2024 மக்களவைத் தேர்தலையொட்டி, திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் வெளியிட்டார். இதில் பெட்ரோல் ரூ.75க்கும், டீசல் ரூ.65க்கும் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. திமுக வாக்குறுதி அளித்தபடி, எப்போது பெட்ரோல், டீசல் விலை குறையும்? என்ற கேள்வி பல காலங்களாகவே எதிர்க்கட்சியினரால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது.