அமலுக்கு வந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்... முழு விவரமும், சிறப்பம்சமும்...
அமலுக்கு வரும் புதிய குற்றவியல் சட்டங்கள்:
இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக பா.ஜ.க அரசு அமைந்திருக்கும் நிலையில், மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் வேலையை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், புதிய குற்றவியல் சட்டங்கள் 2024, ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. மேலும் இச்சட்டங்கள் குறித்து ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள 5.65 லட்சம் காவலா்கள், சிறை, தடயவியல், நீதித் துறை அதிகாரிகள் மற்றும் சுமாா் 40 லட்சம் தன்னாா்வலா்களுக்கு பயிற்சியளித்து தயாா்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் மும்முரமாக ஈடுபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டும் கிடையாது மத்திய உயா் கல்வித் துறையின் வழிகாட்டுதலில் 1,200 பல்கலைக்கழகங்கள் மற்றும் 40,000 கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு(UGC) சாா்பிலும் 9,000 தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் ஏ.ஐ.சி.டி.இ சாா்பிலும் புதிய சட்டங்கள் பற்றிய விவரங்கள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளன.
புதிய குற்றவியல் சட்டத்தின் தேவை என்ன?
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் காலனிய ஆதிக்கத்துக்கு ஏற்றார்போல் இயற்றப்பட்ட சட்டங்களை எல்லோருக்கும் நீதி பரிபாலனம் செய்யும் சட்டங்களாக மாற்றுவதே இச்சட்டத்திருத்தத்தின் நோக்கமாகும். நாட்டில் சுதந்திரத்திற்கு முன்பு இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், சாட்சியச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் போன்ற பழைமையான சட்டங்களை மாற்றி நிகழ்காலத் தேவைகளைப் பூா்த்தி செய்ய குற்றவியல் நீதி அமைப்பை மாற்றியமைக்க மூன்று சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. பாரதிய நியாய சம்ஹிதா(பி.என்.எஸ்) மசோதா 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷ சம்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்) மசோதா 2023, பாரதிய சாக்ஷ்ய ஆதிநியம் (பி.எஸ்) மசோதா 2023 ஆகிய இந்த மூன்று குற்றவியல் சட்டங்கள் 2024, ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன.
இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும், மொழிபெயர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அது விரைவில் முடிவடையும் என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பணி முடிந்ததும், தமிழ்ப் பதிப்பு, ஆங்கிலத்தில் உள்ள சட்டங்களின் உண்மையான மொழிபெயர்ப்பாக அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்படும். சான்றிதழ் பெற்ற பிறகு, இன்னும் சில தினங்களில் அரசு மொழிபெயர்த்த தமிழ் பதிப்பு மாநிலத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் நான்கு ஆண்டு ஆய்வுகள், விரிவான ஆலோசனைகள் மற்றும் விவாதங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ளன.