உலகத் தமிழர்களின் மனதை உருக்கிய மரணச் செய்தி - பிரதமர் மோடி, அண்ணாமலை இரங்கல்!
இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் காலமானார். யார் இந்த இரா.சம்பந்தன்? ஒரு பார்வை.
இராஜவரோதயம் சம்பந்தன் பிப்ரவரி ஐந்து 1933 ல் பிறந்தார் . இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைவரும் ஆவார். 1977 முதல் 1983 வரையும் பின்னர் 2001 முதல் இறக்கும் வரையும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2015 செப்டம்பர் 3 முதல் 2018 டிசம்பர் 18 வரை இவர் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார்.
வாழ்க்கைச் சுருக்கம்:
திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சம்பந்தனின் தந்தை ஏ.இராஜவரோதயம் கல்லோயா திட்டத்தில் பணியாற்றியவர். சம்பந்தன் யாழ்ப்பாணம் சம்பத்தரசியார் கல்லூரி, மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். லீலாதேவி என்பாரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சஞ்சீவன், செந்தூரன், கிரிசாந்தினி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
அரசியல் ஈடுபாடு:
சம்பந்தன் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தனர். இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் படி தனி நாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும், 1983 கருப்பு சூலை நிகழ்வுகளில் மூவாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் சிங்களக் காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் அவர்கள் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர். மூன்று மாதங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபெறாமல் போனதால் சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 1983, செப்டம்பர் 7 இல் இழந்தார்.1989 நாடாளுமன்றத் தேர்தலில் சம்பந்தன் ஈஎன்டிஎல்எஃப்/ஈபிஆர்எல்எஃப்/டெலோ/தவிகூ கூட்டமைப்பின் வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டார். கூட்டணியின் வேட்பாளர் எவரும் இம்மாவட்டத்தில் வெற்றி பெறவில்லை.