காங்கிரஸ் அலட்சியத்தால் கச்சத்தீவு கை மாறியதா? வரலாறும், தொடரும் சர்ச்சையும்..
கச்சத்தீவு அமைப்பு:
1480 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்பட்டு வங்கக் கடலில் ராமேஸ்வரம் தீவும் அதை சுற்றி 11 தீவுகளும் உண்டானதாக சொல்லப்படுகிறது. அப்படி உருவான தீவுகளில் ஒன்று தான் கச்சத்தீவு. கச்சத்தீவு தமிழகத்தின் ராமேஸ்வரத்திலிருந்து 17 கி.மீ தூரத்தில் உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து வடமேற்கே 55 கி.மீ தொலைவில் உள்ள ராமநாதபுரத்தில் அமைந்திருந்த ராமநாடு ஜமீன்தாரி, 17ஆம் நூற்றாண்டில் தீவைக் கைப்பற்றியது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது இது மெட்ராஸ் பிரசிடென்சியின் ஒரு பகுதியாக கச்சத்தீவு மாறியது. கச்சத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்கள் 20 சென்ட் ஆகும்.
இதிகாசங்களில் இடம்பெற்ற தீவு:
இந்து மதத்தின் முக்கிய இதிகாசமான ராமாயணத்தில் ஸ்ரீராமரும், வாலியும் போரிட்ட தீவு தான் கச்சத்தீவு. அதாவது முன்னர் காலத்தில் அது வாலி தீவு என்றும் அழைக்கப்பட்டது. இதன் காரணமாக தான் 1974-ல் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில், குவாலியரின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் கச்சத்தீவை, 'வாலி தீவு' என்றே குறிப்பிட்டு பேசி இருப்பார் என்பதும் கூடுதல் தகவல்.
கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதன் பின்னணி:
1920 ஆம் ஆண்டில் கச்சத் தீவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று இலங்கை அரசு கூற ஆரம்பித்தது. இந்தியா 1956ம் ஆண்டிற்குப் பின்னால் தன்னுடைய கடல் எல்லை கோட்டை 3 கடல் மைல்களில் இருந்து 6 கடல்மைல்களாக விரிவுப்படுத்தியது. அத்துடன் மீன்பிடிக்கும் உரிமையை 100 கடல் மைல்கள் தூரத்திற்கு விரிவுபடுத்தியது. இது கச்சத்தீவை கைப்பற்ற இந்தியா எடுக்கும் முயற்சி என்று இலங்கை அரசு கருதி போட்டியாக 1970ல் அதே போன்ற ஒரு அறிவிப்பை இலங்கை வெளியிட்டது. 1973-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் அன்றைய பிரதமரான இந்திராகாந்தி இலங்கை சென்றார். பிறகு 1974-ஆம் ஆண்டு இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயகே இந்தியா வந்தார். இந்திராகாந்தியும், சிறிமாவோவும் நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழகத்தை கேட்காமலே கச்சத்தீவு கை மாறியது.