தமிழகத்தில் அதிகரிக்கும் அரசியல், சாதி அடிப்படையிலான கொலைகள்.. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?
2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, மு.க.ஸ்டாலின் பிரச்சார வீடியோவில் பேசும் போது, "சட்டம் மற்றும் ஒழுங்கு எனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும். தவறு செய்பவர்களுக்கு மீண்டும் சொல்கிறேன், தவறு செய்பவர்கள் தண்டிக்கப் படுவார்கள். நிச்சயம் எங்களது ஆட்சியில் தண்டிக்கப் படுவார்கள்" என்றெல்லாம் கடந்த கால வீடியோவில் பேசி இருப்பார். ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகத்தில் சாதி, அரசியல் உள்நோக்கங்களால் அடிக்கடி நடத்தப்படும் கொடூரமான கொலைகளின் சம்பவங்கள் நிச்சயம் நமக்கு கவலையை தான் தருகிறது. இச்சம்பவங்கள் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மேலாண்மையில் திமுக அரசின் தோல்வியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தற்போது திமுக ஆட்சியில் உள் நோக்கத்துடன் நடந்த கொடூரமான கொலை சம்பவங்களின் தொகுப்பை பார்க்கலாம்.
சம்பவம் 1:
சமீபத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5 அன்று மாலை சென்னை பெரம்பூர் அருகே கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது வீட்டிற்கு அருகில் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டார். அரிவாள் மற்றும் கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்த நபர்களால் தாக்கப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு விரைந்த அவரது குடும்பத்தினர், அவர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டனர். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் 2:
தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் 20 மே 2024 அன்று, பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் உள்ள உணவகம் அருகே பட்டப்பகலில் அடையாளம் தெரியாத கும்பலால் தீபக் ராஜா என்ற தலித் பிரமுகர் கொடூரமாக தாக்கப்பட்டார். ஆறு பேர் கொண்ட குழுவினால் தாக்கப்பட்டு உடனடியாக உயிரிழந்துள்ளார். பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் விதிகள் உட்பட சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் பாளையங்கோட்டை காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.