பாரதிய ஜனசங்கத்தை தோற்றுவித்த ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளுக்கு மோடி வாழ்த்து - யார் இந்த முகர்ஜி?

நேற்றைய தினம் பாரதிய ஜன சங்கத்தை தோற்றுவித்த ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளாகும் .மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்கூறி தங்களது கருத்துக்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

Update: 2024-07-07 17:16 GMT

பாரதிய ஜனதா கட்சியை நிறுவியவர் ஷியாமா பிரசாத் முகர்ஜி. இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்த கல்வியாளர், வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவர். சுதந்திர இந்தியாவின் முதல் நடுவண் அரசில் வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக, ஜவகர்லால் நேருவின் அமைச்சரவையில் 15 ஆகஸ்டு 1947 முதல் 6 ஏப்ரல் 1950 வரை இருந்தவர். ஜவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, 1951ஆம் ஆண்டில் பாரதிய ஜனசங்கம் கட்சியை நிறுவினார். பின் இக்கட்சி பாரதிய ஜனதா கட்சி என உருமாறியது.

ஷியாமா பிரசாத் முகர்ஜி மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கல்கத்தாவில், உயர்நீதிமன்ற நீதியரசரும், கொல்கத்தா பல்கலைக் கழக துணைவேந்தருமான சர் அசுதோசு முகர்சி - ஜோகமாயா தம்பதியருக்கு 6 ஜூலை 1901-இல் பிறந்தார். மனைவி சுதா தேவி, இளமையில் மறைந்தபின், இறுதி வரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளவில்லை.முகர்ஜி கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியிலும், வங்க மொழியிலும் பட்டம் பெற்றவர். 1926இல் இங்கிலாந்து சென்று சட்டம் பயின்று, 1927இல் பாரிஸ்டர் ஆனார். தனது இளம் வயதில் (33 வயதில்) கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1934 முதல் 1938 வரை துணை வேந்தராக இருந்தவர்.

1950-ஆம் ஆண்டில்,லியாகத்-நேரு ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சை காரணமாக, முகர்ஜி 6 ஏப்ரல் 1950ஆம் ஆண்டில் நேருவின் அமைச்சரவையிலிருந்து விலகியதால், முகர்ஜி மேற்கு வங்க மக்களின் நாயகன் ஆனார். ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் தலைவர் எம். எஸ். கோல்வால்கருடன் கலந்தாய்வு செய்த பின், 21 அக்டோபர் 1951ஆம் ஆண்டில் பாரதிய ஜனசங்கம் கட்சியை தில்லியில் தோற்றுவித்து, அக்கட்சியின் முதல் அகில இந்தியத் தலைவரானார். 1952-ஆம் ஆண்டில் நடந்த முதல் இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனசங்கம் கட்சி மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் ஒரு தொகுதியில் முகர்ஜி வெற்றி பெற்றார்.

ஜம்மு காஷ்மீர் மாநில அரசிற்கு தனிக் கொடி, தனிச் சின்னம், தனி பிரதம மந்திரி இருப்பதை முகர்ஜி கடுமையாக எதிர்த்தார். ஒரு நாட்டில் இரண்டு அரசியல் அமைப்பு சட்டமும், தேசிய சின்னமும் இருக்க இயலாது என வாதிட்டார். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநில பிரதமரின் அனுமதியின்றி, இந்திய நாட்டுக் குடியரசுத் தலைவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் செல்ல இயலாது என்ற விதியை முகர்ஜி கடுமையாக எதிர்த்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தனிக் கொடி, தனி பிரதம மந்திரி போன்ற சிறப்பு தகுதிகள் வழங்கும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 370ஐ நீக்கக் கோரி, முகர்ஜி தலைமையிலான பாரதிய ஜனசங்கம், இந்து மகாசபை மற்றும் ராம ராஜ்ஜிய சபையுடன் இணைந்து குரல் கொடுத்து, சத்தியாகிரகப் போராட்டங்களில் ஈடுபட்டது.

காஷ்மீர் அரசின் அனுமதி அடையாள அட்டையின்றி காஷ்மீரில் உள்ள லக்கன்பூர் என்ற ஊரில் நுழைந்த ஷியாமா பிரசாத் முகர்ஜியை, ஜம்மு காஷ்மீர் மாநில காவல் துறையினரால், 11 மே 1953இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.ஜூன் 23 1953-இல் விஷக்காய்ச்சலால் மரணமடைந்தார் என காவல் துறை அறிவித்தது.சியாமா பிரசாத் முகர்ஜியின் கைது, ஜவகர்லால் நேருவின் சதித் திட்டம் என அடல் பிகாரி வாஜ்பாய் 2004-இல் குறிப்பிட்டுள்ளார்.

அவரது பிறந்த நாளான நேற்று பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். பிரதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில் "தனது வலிமையான தேசியவாத சிந்தனைகளால் இந்தியாவைப் பெருமைப்படுத்திய டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கு அவரது பிறந்தநாளில் மரியாதைக்குரிய அஞ்சலி. தாய் நாட்டுக்கான அவரது அர்ப்பணிப்பும், தியாகமும் நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும்" என தெரிவித்துள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில் "சிறந்த தேசியவாத சிந்தனையாளர் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். வங்கத்தை நாட்டின் ஒரு அங்கமாக வைத்திருப்பதற்கான அவரது போராட்டமாக இருந்தாலும் சரி, ஜம்மு காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக வைத்திருக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுக்காக உச்சபட்ச தியாகம் செய்வதாக இருந்தாலும் சரி, நாட்டின் ஒற்றுமைக்காகவும் ஒருமைப்பாட்டுக்காகவும் போராடுவது பற்றி பேசும் போதெல்லாம் டாக்டர் முகர்ஜி நிச்சயமாக நினைவு கூறப்படுவார். அவரது தனித்துவமான முயற்சிகளுக்காக ஒவ்வொரு இந்தியனும் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறோம். பாரதிய ஜன சங்கத்தை நிறுவியதன் மூலம் நாட்டுக்கு கருத்தியல் ரீதியில் மாற்று வழிகளை வழங்கிய டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி நீண்ட காலம் முதல் வழிகாட்டியாக இருப்பார் "என்று குறிப்பிட்டுள்ளார்.


SOURCE :Newspaper 


Tags:    

Similar News