வாரிசு அரசியலும் ஊழல் அரசியலும் செய்து வரும் அரசியல்வாதிகள் வருவதற்கு முன்னர் முதல்வராக இருந்த கர்மவீரர் காமராசர் பிறந்த தினம் இன்று - ஒரு சிறப்பு பார்வை!

தமிழக முதலமைச்சர்களின் தனக்கென்று எதுவும் சேர்த்துக் கொள்ளாமல் பொதுமக்களுக்கும் ஏழை மாணவர்களுக்கும் பெருந்தலைவராக திகழ்ந்தவரின் வரலாறு பற்றி காண்போம்.;

Update: 2024-07-15 11:14 GMT

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்" என்ற வரிகளுக்குப் பொருத்தமானவர் பெருந்தலைவர் காமராஜர் .இவர் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் நாள் பிறந்தார்.சிவகாமியின் செல்வப் புதல்வனாய் கருப்பு வைரமாய் குமாரசாமியின் குமரனாய் அவதரித்த இந்த தமிழன் விருதுநகர் மாவட்டத்தில்  உதித்தார். தனது ஆறாவது வயதில் தந்தை இறந்துவிட தாயைக் காக்கும் தனையனாய் தாய்மாமன் கடையில் வேலை பார்த்த காமராஜர் அங்கு வந்த தலைவர்களின் பேச்சால் கவரப்பட்டு தாய் நாட்டை காக்கும் தலைவனாக மாறினார்.

தலைவருக்கெல்லாம் தலைவராக இருந்ததால் பெருந்தலைவர் என்று அழைக்கப்பட்டார். இவரது அன்னை இவருக்கு காமாட்சி என்று செல்ல பெயர் சூட்டி மகிழ்ந்தார். அது மட்டுமல்லாமல் வேறு பல பெயர்களில் அவர் அழைக்கப்பட்டார் கருப்பு காந்தி, கருப்பு வைரம் ,ஏழைப் பங்காளன் ,பகல் உணவு தந்த பகலவன் ,கர்மவீரர் ,கிங்மேக்கர் என்பதெல்லாம் மக்கள் அவருக்கு சூட்டிய செல்லப் பெயர்கள் .படிப்பறிவை விட அனுபவ அறிவால் பல திட்டங்களை வகுத்து அதில் வலிமை இருந்தபோது எளிமையோடு இருந்தவரை வரலாறு வாயடைத்து பார்த்தது .வேட்டி கட்டிய தமிழனாலும் சாதனை படைக்க முடியும் என்பதற்கான அடையாளமாய் விளங்கினார். திருமணம் செய்து கொள்ளாமல் கடமையையே திருமணம் செய்து கொண்டார்.

நெருக்கடியான சமயங்களில் மக்களுக்கு வழிகாட்டியாய் எளியவர்களின் தோழனாய் வாழ்ந்தவர். ஏழை மக்களின் துயர் துடைத்தவர். அவர்களின் நிலையில் நின்று பிரச்சனைகளை நோக்குபவராகவும் திகழ்ந்த காமராஜரை மக்களுக்கு பிடித்திருந்தது. பகட்டுகள் இல்லாத அந்த பச்சைத் தமிழன் அனைவரின் மனம் கவர்ந்தவராய் இருந்தார். மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம் 'பள்ளிக்குச் செல்லவில்லையா ?'என்று கேட்டார். அதற்கு அவன் 'சாப்பாடு தருவீர்களா' என்று கேட்டான். பையனின் எதிர் கேள்வியை மனதில் கொண்டு போட்டார் ஒரு சட்டம் .அதுதான் இலவச மதிய உணவுத் திட்டம் .பணப்பையை பார்க்கும் மனிதர்கள் மத்தியில் ஏழைகளின் இரைப்பையை பற்றி சிந்தித்தவர். வயிற்றில் ஈரமும் கண்களில் நீரையும் உணர்ந்த தலைவர்.

ஏழைப் பங்காளன் என்று போற்றப்பட்டார். பட்டி தொட்டி எங்கும் பள்ளிகள் திறந்தார். ஏழைக் குழந்தைகள் கல்வி பெற கையேந்திப் பிச்சை எடுக்கவும் தயார் என்றார். தான் படிக்காவிட்டாலும் இந்த தேசம் படிக்க வேண்டும் என்று நினைத்தவர் கர்மவீரர் காமராசர். எந்த சொத்தும் இல்லாதவர்களுக்கு கல்வி ஒரு சொத்து, கல்வி என்ற சொத்தைப் பெற்று விட்டாலே வறுமை ஒழிந்து விடும் என்பதே காமராஜரின் எண்ணம். அதனால்தான் மாணவர்களுக்கு கல்வி கொடுப்பதில் அதீத அக்கறை எடுத்துக்கொண்டு முதலமைச்சராக இருந்த காலத்தில் அனைத்து சிறப்பான திட்டங்களையும் நிறைவேற்றி இன்று மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற பெருந்தலைவனாய் விளங்குகிறார்.

ஆனால் இன்றுள்ள திராவிட மாடல் அரசியல்வாதிகளோ, தனக்கும் தன் வாரிசுகளுக்கும் ஏழேழு தலைமுறைக்கும் சொத்து சேர்ப்பதில் குறியாகவும் வாரிசு அரசியல், ஊழல் அரசியல் செய்துகொண்டும் நாட்டைக் கொள்ளையடித்துக் கொண்டும் ஆட்சி நடத்துகின்றனர் .திராவிட மாடல் அரசியல்வாதிகள் இவரைப் போன்ற பெரும் தலைவர்களைப் பார்த்தாவது திருந்த வேண்டும்.


SOURCE :News

Tags:    

Similar News