காங்கிரஸ் கட்சியிடம் பேசி காவேரி நீரை பெற்று தர முடியவில்லை : இண்டி கூட்டணியில் திறனற்ற திமுக அங்கம் வகித்து என்ன புண்ணியம்?
காவிரி நதிநீர் பிரச்சனையின் ஆரம்ப புள்ளி:
டெல்டா மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகின்ற காவிரி நீர் பிரச்சனை சுமார் 200 ஆண்டுகளாக நடந்து வருகிறது. 1807 ஆம் ஆண்டு அன்றைய மைசூர் அரசுக்கும் சென்னை மாகாண அரசுக்கும் இடையே காவிரி நதிநீரை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனையில் 1892 ஆம் ஆண்டு முதன்முதலாக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி மைசூர் அரசு காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக அணை ஒன்றை கட்டினால் அது குறித்த முழு விவரங்களையும் சென்னை மாகாணத்திற்கு அனுப்பி தமிழகத்தின் ஒப்புதலை பெற்ற பிறகே கட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் காவிரி நதிநீர் பிரச்சனை கிட்டத்தட்ட பல வருடங்கள் நீடிக்க 1990 இல் காவிரி நடுவர் மன்றமும் அமைக்கப்பட்டது.
ஆனால் கர்நாடகாவில் பருவ காலத்திற்கு ஏற்றபடி மழை பெய்தால் இந்த பிரச்சனை ஏற்படுவதில்லை, மழைக்குறையும் பொழுது இரு மாநிலங்களுக்கும் இடையே காவிரி நதிநீருக்கான மோதல் முற்றிவிடும். இது இன்றளவும் நடந்து வருகிறது. அதாவது 2022 க்கு முன்பு கர்நாடகாவில் வழக்கத்தை விட அதிகமான மழை பெய்தது, மகாராஷ்டிராவிலும் அதிக மழை பெய்த காரணத்தினால் அங்கும் தண்ணீர் பாய்ந்து ஓடியது. இதை அடுத்து நிர்ணயித்த அளவைவிட அதிகமான தண்ணீர் தமிழகத்திற்கும் பாய்ந்து சென்றது. ஆனால் தமிழகத்திலும் மழை அதிகரித்திருந்ததால் இங்குள்ள அணைகள் நிரம்பியது. அதனால் காவிரி நீர் குறித்த பிரச்சனைகள் இரு மாநிலங்களுக்கும் இடையே இல்லாமல் இருந்தது.
வஞ்சிக்கும் கர்நாடகா அரசு:
ஆனால் 2023 ஆம் ஆண்டு இரு மாநிலங்களுக்கும் இடையேயான சூழ்நிலை மொத்தமாக மாறியது. தென்மேற்கு பருவ மழை கைவிட்டதால் கர்நாடகா அணை நிரம்ப வில்லை. மேலும் காவிரி நீர் பாசன பகுதிகளிலும் நீர்மட்டம் குறைந்து இருந்தது. அதேபோன்றுதான் தமிழகத்திலும் பெரும் அளவிலான மழை காணப்படாததால் பெருமளவிலான விவசாயிகள் காவிரி நதிநீரை பெரிதும் நம்பி இருந்தனர். அதனால் இரு மாநிலங்களுக்கும் இடையே காவிரி நதி நீர் பிரச்சனை மீண்டும் வெடிக்க பல போராட்டங்களை செய்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விடும்படி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு அளித்தது. இதை அடுத்து தமிழகத்திற்கு தினமும் பத்தாயிரம் கன அடி தண்ணீரை கர்நாடகா அரசு திறந்து விட்டது.