வனப்பகுதியில் சாமி கும்பிட செல்லும் பக்தர்களை சீண்டி பார்க்கும் தமிழக அரசு.. இந்துமுன்னணி கண்டனம்..

Update: 2024-07-27 07:53 GMT

இந்து பக்தர்களுக்கு கடுமையான கெடுபிடி: 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நெல்லை மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் கோவில் திருவிழாவை நிம்மதியாக கொண்டாட முடியாத வகையில் பக்தர்களுக்கு கடுமையான கெடுபிடிகள் விதித்துள்ளன.இது தொடர்பாக இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் அவர்கள் அறிக்கையில் கூறும் போது, "பக்தர்கள் தங்குவதற்கு கோவில் இடத்தைத் தவிர மற்ற இடங்களில் தற்காலிக குடில்கள் அமைக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்திருப்பது பாரம்பரியமான விழாவிற்கு வரும் பக்தர்களை தடுக்கும் நோக்கமாகும். ஆடி அமாவாசையில் பக்தர்கள் விரதம் இருந்து ஒரு வாரம் தங்கி கோவிலில் விழாவினை நடத்துவார்கள்.

அவர்கள் தங்குவதற்கு வசதியாக பாரம்பரியமான தற்காலிக குடில்கள் கோவிலை சுற்றிய வனப்பகுதியில் அமைக்கப்படும். ஆனால் தற்போது வனத்துறை நிர்வாகம் கோவிலை தவிர மற்ற இடத்தில் குடில்கள் அமைக்க கூடாது என்றும், தனியார் வாகனங்களில் செல்லக்கூடாது அரசு பேருந்தில் மட்டுமே செல்ல வேண்டும் என பல கெடுபிடிகள் விதித்துள்ளனர். காடுகளை பாதுகாக்கும் நோக்கத்தோடு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக நியாயப்படுத்துகிறார்கள். ஆனால் உண்மையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் வனத்துறையின் நோக்கம் இந்துக்களின் வழிபாட்டு முறைகளை சீர்குலைப்பதே ஆகும். கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களிடம் பேருந்து கட்டணம் சாதாரண நாட்களை விட கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.


இது பக்தர்களின் பக்தியை மிரட்டி பணமாக்கும் மலிவான செயலாகும். அரசு பேருந்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்றால் பக்தர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் கட்டணம் இல்லாத பேருந்து வசதியை செய்து தர வேண்டும் ஹஜ்செல்லும் இஸ்லாமியர்களுக்கு, ஜெருசலம் செல்லும் கிறிஸ்தவர்களுக்கு மானியம் கொடுக்கும் தமிழக அரசு கோவிலுக்கு செல்லும் பக்தர்களிடம் பேருந்து கட்டணம் வசூலிப்பது மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரான செயலாகும். சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் போல நெல்லை மாவட்டத்தில் திருகுறுங்குடி நம்பி கோயில், கடனாநதி அத்திரி மலை, விருதுநகர் மாவட்டம் சதுரகிரி ஸ்ரீசுந்தரமகாலிங்கம் கோவில் குற்றாலம் ஸ்ரீசெண்பகாதேவியம்மன் கோவில் என தமிழகத்தில் உள்ள அனைத்து வனப்பகுதிகளில் உள்ள திருக்கோவில்களில் பக்தர்கள் சுதந்திரமாக சென்று வழிபடுவதை திட்டமிட்டு கெடுபிடிகள் விதித்து சீர்குலைத்து வருகிறார்கள். வனப்பகுதிகளில் உள்ள கோவில்கள் எல்லாம் வனத்துறை உருவாவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே உள்ள திருக்கோவில்கள் ஆகும். விழாக்களும் அவ்வளவு பழமை வாய்ந்தவை ஆகும். அன்று முதலே தொன்றுதொட்டு வனங்கள் பாதுகாப்பாக தானே இருந்து வருகிறது.


வனத்தை ஆக்கிரமித்துக் கொண்டு பக்தர்களை மிரட்டுகிறதா தமிழக அரசு? 

ஏதோ வனத்துறை வந்து சாமி கும்பிடும் பக்தர்களுக்கு கட்டுபாடு விதித்துதான் காடுகளை பாதுகாப்பது போல மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். பலநூறு ஆண்டு பழமை வாய்ந்த திருக்கோவில்கள் அமைந்துள்ள வனத்தை அரசு ஆக்கிரமித்துக் கொண்டு பக்தர்களை மிரட்டுவது வேதனையாக உள்ளது. ஆனால் பாபநாசம் சேர்வலார் உள்ளிட்ட பல்வேறு மலை மேல் உள்ள கிறிஸ்தவ சர்ச்சுகளில் திருவிழாக்களில் இதுபோல் கெடுபிடிகள் விதிக்கப் படுவதில்லையே வனத்துறையின் சட்டங்களும் அதிகாரங்களும் இந்து கோயில்களை மட்டுமே குறிவைத்து நிர்பந்திக்கப்படுகிறது. பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக திருவிழாக்கள் எப்படி நடைபெற்றதோ! என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ! அவற்றை தொடர்ந்து பின்பற்றுவதற்கு மாவட்ட நிர்வாகமும், வனத்துறையையும் ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பாபநாசம் சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவில் கடந்த சில வருடங்களாக பக்தர்கள் வழிபட்டு சாமி கும்பிட்டு திரும்புவதற்கு வனத்துறையும் மாவட்ட நிர்வாகம் பெரும் இடையூறாக உள்ளது. காடுகளில் மரங்கள் கடத்தப்படுவதும் தீவிரவாத பயிற்சிகள் நடைபெறுவதும் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதையும் தடுக்க திராணியற்ற நிலையில் வனத்துறை உள்ளதை மக்கள் நன்கறிவார்கள்.

தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்: 

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு வனங்களில் இந்து ஆலயங்களில் பாரம்பரியமாகவும் தொன்றுதொட்டும் நடைபெற்று வரும் வழிபாடுகளை இடையூறு செய்யும் வனத்துறையையும் தமிழக அரசையும் இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது என்று அவர் கூறினார். மேலும், சாமி கும்பிட செல்லும் பக்தர்களிடம் அரசாங்கம் சட்டத்தை சொல்லி வழிபாட்டு உரிமையை தடுத்தால் மக்கள் அரசுக்கு எதிராக தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் சூழ்நிலை உருவாகும் அதனை இந்துமுன்னணி தலைமையேற்று நடத்தும் என்பதை தமிழக அரசுக்கு இந்துமுன்னணி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

Input & Image courtesy: Hindu Munnani

Tags:    

Similar News