கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்ட லித்தியம்: எதிர்காலத்தில் மின்சாரா வாகனங்களின் உற்பத்தியில் தன்னிறைவு அடையும் இந்தியா...
மத்திய அரசு மின்சார வாகனங்களில் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிற நிலையில், மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது குறித்த முழு தொகுப்பு:
மின்சார வாகனங்களின் உற்பத்தி திட்டம்:
பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களின் உபயோகத்தை குறைக்கவும் சுற்றுசூழலை பாதுகாப்பதற்காகவும் தற்பொழுது மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாடு மத்திய அரசால் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. மேலும் மத்தியில் பாஜக தனது ஆட்சியை நிறுவியதிலிருந்து மின்சார வாகனங்களின் பயன்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன் விளைவாக 2018 முதல் 2023 வரை மின்சார வாகனங்களில் பதிவு விகிதமானது 209.17% ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக இந்தியாவில் மின்சார வாகனங்களில் உற்பத்தி திட்டம் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டம் 2019 ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 10,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டது.
அதிகரித்த மின்சார வாகன பயன்பாடு:
அதுமட்டுமின்றி மற்ற எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு உபயோகப்படுத்தப்படும் பேட்டரியின் விலையை குறைப்பதற்காகவும் நாட்டில் மேம்பட்ட வேதியல் செல் உற்பத்தி செய்வதற்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டத்திற்கு பிரதமர் மோடி அரசு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் பேட்டரி விலையும் குறையும், அதோடு எலக்ட்ரானிக் வாகனங்களின் செலவும் குறையும். மேலும் 2021 பட்ஜெட்டில் ரூபாய் 25,938 கோடி ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரி பாகங்களுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் 5 ஆண்டு காலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் விளைவாக ஒவ்வொரு மாநிலத்திலும் மின்சார வாகனங்களின் பயன்பாடானது அதிகரிக்க ஆரம்பித்தது, குறிப்பாக 2023 நிலவரப்படி தமிழ்நாட்டில் 1,73,152 மின்சார வாகனங்கள் உபயோகத்தில் உள்ளன. மேலும் அரசு பேருந்துகள் மற்றும் மற்ற வாகனங்கள் அனைத்துமே மின்சாரமயமாக்கப்பட்டு வருகிறது.
லித்தியம் என்றால் என்ன?
இப்படி மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்துவதற்காக மத்திய அரசு பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதோடு மின்சார வாகனங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருள்களில் பயன்படுத்தப்படும் முக்கிய உலோகமான லித்தியம் கண்டுபிடிப்பிலும் இந்தியா தொடர்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. ஏனென்றால் லித்தியம் உலோகம் மின்சார வாகனங்கள் அனைத்திலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் எலக்ட்ரானிக் பொருட்களான மொபைல் போன், லேப்டாப், அனைத்து வகையான பேட்டரிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி கடந்த வருடம் இந்தியாவில் முதல்முறையாக லித்தியம் உலோகம் கண்டுபிடிக்கப்பட்டது.