செப்டம்பர் 2001-ல் அமெரிக்க இரட்டை கோபுர தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, ஒசாமா பின்லேடனை மற்றும் அல்கொய்தாவை அழிக்கும் நோக்கில் அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் ஊடுருவி தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இருபது வருடங்களுக்குப் பிறகு தற்பொழுது அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுகின்றன. அமெரிக்கா வெளியேறியவுடன் ஆப்கன் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையிலான அதிகாரப் போராட்டம் தீவிரமடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானின் தற்போது இருக்கும் ஓரளவு நிலையான அரசு நீடிக்குமா? பல்லாண்டு காலமாக பலவிதமான போரினால் சீரழிந்து இருக்கும் ஆப்கானிஸ்தானின் நிலை என்னாகும் என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையீடு அளவுக்கு அதிகமாகவே உள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு இருக்கக்கூடாது என்று பாகிஸ்தான் விரும்புகிறது. ஆப்கானிஸ்தானிற்கு இந்தியா மனிதாபிமான முறையில் செய்யும் உதவிகளும், உள் கட்டமைப்பு ஒத்துழைப்புகளும் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை பல்வேறு விதங்களில் பாகிஸ்தான் உடைத்தது. தற்போது அமெரிக்கா அவமானகரமான தோல்வியடைந்து, பாகிஸ்தான் மற்றும் தலிபான்களின் கருணையின் கீழ் ஆப்கானிஸ்தானை விட்டுச் செல்கிறது.
ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் பங்களிப்பை ஓரம் கட்டுவதற்கு பாகிஸ்தான் ஒரு வாய்ப்பைக் கூட நழுவ விடுவதில்லை. ஆப்கானிஸ்தான் மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா மீது சமீபத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.