பிரதமரின் பங்களாதேஷ் விஜயம் - இருதரப்பு உறவுகளின் நிலை என்ன? ஓர் பார்வை!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பங்களாதேஷிற்கு விஜயம் செய்து திரும்பினார். அவரின் வருகையை எதிர்த்து பங்களாதேஷின் சில இஸ்லாமிய கும்பல்களும் அரசாங்கத்திற்கு எதிரான மாணவர்கள்களும் நடத்திய போராட்டங்கள் பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசினாவிற்கு கண்டிப்பாக சங்கடத்தை ஏற்படுத்தியது.
டாக்கா பல்கலைக்கழகத்தில் போராட்டங்களை கட்டுப்படுத்த போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. இன்னும் பல மாவட்டங்களில் தீவிரமான இஸ்லாம் கூறுகளான Hefazat-e-Islam ஐ அடக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருந்தது. போலீஸார் துப்பாக்கிச்சூடுகளில் பல உயிர்கள் பறிபோயின.
பங்களாதேஷில் உள்ள எதிர்க்கட்சிகள் இந்த சம்பவங்களை முடிந்த அளவு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன. மேலும் பங்களாதேஷின் 1971 போர்க்குற்றங்களுக்காக தூக்கு மேடைக்கு அனுப்பி வைக்கப்பட்ட jamaat-e-islami என்ற அமைப்பின் இடம் தற்பொழுது இந்த ஹெபாசாட்டால் (Hefazat-e-Islam) நிரப்பப்படலாம் என்ற அச்சம் நிலவுகின்றது.
இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு உதவும் திட்டங்களை தீட்ட வேண்டியது பங்களாதேஷ் அரசாங்கத்தின் கடமையாகும். கடந்த சில வருடங்களாக Hefazat-e-Islam அமைப்புக்கு பங்களாதேஷ் அரசாங்கம் இடமளித்தது அங்குள்ள மத சார்பற்ற சக்திகளின் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
2015க்கு பிறகு தற்பொழுது தான் பங்களாதேஷிற்கு செல்லும் நரேந்திர மோடியின் விஜயம், அவருக்கும் அவருடைய குழுவினருக்கும் பலவிதங்களில் திருப்தி அளிக்கும் விதமாகவே உள்ளது. மோடி தன்னுடைய நிலைப்பாட்டினை முழு விஜயத்தின் போதும் வெளிப்படுத்தினார்.
இந்தியாவிற்கும் பங்களாதேஷிற்கும் இடையிலான நெருக்கமான உறவுகள், பங்களாதேஷ் விடுதலைப்போராட்டம் 1971இல் நடந்த பொழுது தார்மீக ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் இந்தியா அளித்த உதவிகளையும் சுட்டிக்காட்டினார். பல வழிகளில் பங்களாதேஷில் திரு நரேந்திர மோடி மற்றும் சஷேக் ஹசீனாவின் தொடர்பு, பழைய தலைமுறைக்கு பங்களாதேஷின் அப்போதைய தலைவரான ஷேக் முஜிபுர் ரகுமான் மற்றும் இந்திரா காந்திக்கும் 1970களின் ஆரம்பத்தில் இருந்த நல்ல தொடர்பை நினைவுபடுத்தியது.