'இந்தோ-பசுபிக்' கருத்தியல் மற்றும் 'QUAD' - சீனாவைக் கட்டுப்படுத்தும் யுக்திகள்!
இந்தோ-பசுபிக் என்பது என்ன பகுதி என்பதில் அவ்வளவாக ஒருமித்த கருத்து இல்லை என்றாலும் இது ஆசியா-பசிபிக் மற்றும் இந்தியாவை உள்ளடக்கிய பிராந்தியமாக பரவலாக பார்க்கப்படுகிறது.
இந்தோ- பசுபிக் என்பது இந்திய மற்றும் பசுபிக் பெருங்கடல்களை உள்ளடக்கியது. மேலும் இந்தப் பகுதி நாடுகளின் சர்வதேச கட்டமைப்பிற்கான ஒரு கருத்தியல் சொல்லாகவும் உள்ளது.
2007 ஆம் ஆண்டில் ஜப்பான், இந்தியா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் அமைப்பு 'QUAD' என்று ஆரம்பிக்கப்பட்டது. இது அந்நாடுகள் பகிர்ந்து கொள்ளும் ஜனநாயகம், சட்டத்தின் மதிப்புகள், நாடுகளின் நிலைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுஅனைத்து நாடுகளின் ஒத்துழைப்பை மையமாகக் கொண்டது.
இந்தோ-பசிபிக் பகுதியில் அவர்களின் கடல்சார் பகுதிகள் பொதுவானவை. இது ஆசிய பசிபிக் பகுதியில் அதிகாரச் சமநிலையை பராமரிக்க செயல்படுகிறது. அந்த நேரத்தில் ஒபாமாவின் நிர்வாகம் 'ஆசியா-பசிபிக்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இது குறித்த நிலைப்பாட்டை எடுக்கும் பொழுது 'இந்தோ பசுபிக்' என்ற வார்த்தையை பயன்படுத்த தொடங்கினார்.
இந்த வார்த்தை பிரயோகமும் யோசனையும் ஐரோப்பிய ஒன்றியத்தால் உறுதியாக ஆதரிக்கப்படுகிறது. ஆனால் இது எதிர்காலத்தில் முறையாக நிறுவனமயமாக்கப்படுமா என்ற சந்தேகம் உள்ளது. திறந்த மற்றும் சுதந்திரமான இந்தோ-பசுபிக் என்ற கருத்து உலகம் முழுவதும் பரவலாக உள்ளது. எந்த ஒரு வற்புறுத்தலும் இல்லாமல் நாடுகள் செயல்படலாம் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீடு எளிமையான வழிகளில் ஈடுபட முடியும் என்பதே இதன் பொருள்.
இந்த கருத்தை பயன்படுத்திய முதல் நாடு ஜப்பான். ஜப்பான் பிரதமர், புதிய இணைப்பு தாழ்வாரங்களை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துவதில் ஜப்பான் கவனம் செலுத்தி செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இதே கருத்தை ஏற்றுக்கொண்டார். இந்தக் கருத்தின் முதன்மை கவனம் கடல்களை மையமாகக் கொண்டது. மேலும் இந்திய பெருங்கடலில் இந்தியா ஒரு முக்கியமான மூலோபாய நிலையை வகிக்கிறது.
இந்தியாவிற்கும் அதன் வர்த்தக கூட்டாளிகளுக்கும் இடையிலான கடல்சார் பிணைப்பு இந்தோ பசுபிக் இணைப்பிற்கு இன்றியமையாதது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியில் யூரேசியா மற்றும் ஆப்பிரிக்காவில் சீன செல்வாக்கு விரிவடைந்து வருகிறது. இதை எதிர் சமநிலைப்படுத்த இந்த இந்தோ- பசுபிக் முக்கிய பங்கு வகிக்கிறது.