QUAD கூட்டமைப்பின் தேவையும் எதிர்காலமும்.! #Aus #US #India #US #QUAD

Update: 2021-03-16 01:45 GMT

மார்ச் 12ஆம் தேதி நடந்த QUAD உச்சி மாநாட்டிற்கு முன்முயற்சி எடுத்த பெருமைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உரிதாகிறார்.

ஜோ பிடன், தான் அமெரிக்க ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் எடுத்த இரண்டாவது உயர்மட்ட வெளியுறவுக் கொள்கை முயற்சி இதுவாகும்.

இதற்கு முன்பு பிப்ரவரி 19 அன்று அவர் மியூனிச் (munich) பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றினார். அங்கே ஐரோப்பிய நட்பு நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் சேர்ந்து சீனாவை எதிர்ப்பதற்காக ஒரு அட்லாண்டிக் கூட்டணியை முன்மொழிந்தார்.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் (EU) சீனாவுடன் மோதலில் ஈடுபடும் மனநிலையில் தற்போது இல்லை. ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மார்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மெக்ரான் ஆகிய இருவரும் சீனாவை நேரடியாக எதிர்கொள்வதில் குறைவான ஆர்வத்துடன் இருந்தனர்.

இப்பொழுது இதன் அடுத்த கட்டமாக QUAD வந்துள்ளது. ஆனால் இங்கேயும் கவனம் சீனா மீது உள்ளது. ஆனால் சீனாவின் முரட்டுத்தனத்தை குறித்து இங்கே பேசத் தயங்கவில்லை.

கடந்த முறை QUAD நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்கள் ஜப்பானின் டோக்கியோவில் சந்தித்தபொழுது இதுகுறித்து அவர்களால் ஒரு கூட்டறிக்கை கூட விட முடியவில்லை.

ஏனெனில் அப்போதைய அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பாம்பியோ சீனாவிற்கு எதிரான நிலையில் மிகவும் தீவிரமாக இருந்தார்.

அதிலும் இந்தியா குறிப்பாக ஒபாமா காலத்து கொள்கைகளான திறந்த மற்றும் வெளிப்படையான இந்தோ-பசுபிக், என்பதில் தயக்கம் காட்டியது. Inclusive வார்த்தையை (உள்ளடக்கிய), மற்றொரு Iயையும் சேர்க்க வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பம்.

இந்த முறை மாநாட்டில் ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு இந்தியாவின் முன் முயற்சிகளே காரணம்.

அந்த கூட்டறிக்கையில், 'சுதந்திரமான, திறந்த, அனைத்தையும் உள்ளடக்கிய, ஆரோக்கியமான ஜனநாயக கொள்கையினால் வரையறுக்கப்பட்ட, எந்தவித வற்புறுத்தலுக்கும் கட்டுப்படாத ஒரு பிராந்தியத்தை உருவாக்கப் பாடுகிறோம் என்று தெரிவித்துள்ளது.

இந்த உச்சி மாநாட்டில் முக்கியமான மையமான சீனாவை புறக்கணிக்க முடியாது. அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு அணுகுமுறை வேண்டும் என்று இந்தியா கேட்பதற்கு காரணம், இந்தப் பிராந்தியத்தில் உள்ள பல சிறிய நாடுகளின் நிலைமையை கருத்தில் கொண்டு தான். அவை வெளிப்படையாக சீனாவுக்கு எதிரான ஒரு நிலையை எடுக்க முடியாது.

அமெரிக்கர்கள் தங்களுடைய கட்டுப்படுத்தும் (containment) கொள்கையில் உறுதியுடன் இருந்தனர். எனவே இரு தரப்பும் பாதிவழியில் சந்தித்தது.

மேலும் இந்த கூட்டு அறிக்கை, 'இந்த பிராந்தியத்தில் கடல் வழிகளில் வரும் சவால்களை எதிர்கொள்வது பற்றியும் கிழக்கு மற்றும் தென் சீன கடலில் விதிகள் அடிப்படையிலான கடல் ஒழுங்கிற்கு வரும் சவால்களை எதிர்கொள்ளவும், கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட விவரங்களுக்கு ஒத்துழைப்பு வேண்டும்' என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த பிராந்தியத்தில் வருங்காலத்தில் கூட்டு நடவடிக்கை எடுப்பதற்கான தெளிவான அறிகுறியாகும். ஆனால் இந்தியா இது குறித்து கடந்த காலத்தில் வெளிப்படையாக பேசியது இல்லை.

QUAD முழுமையாக வளர்ச்சியடைந்த ஒரு கூட்டணியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஒரு புதிய பல தரப்பு உறவுகளை வடிவமைத்து வருகிறது.

இதன் உடனடி கவனம் தடுப்பூசிகளையும், பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதிலும் இருப்பதை இந்தியா வரவேற்றுள்ளது.

இந்தியாதான் உலகத்தின் 60 சதவிகித தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இந்த முன்முயற்சி தடுப்பூசி தயாரிக்கும் திறனை உயர்த்தும். இது மேலும் QUAD நாடுகளில் உற்பத்தி துறைக்கான ஒரு இலக்காக இந்தியாவை மாற்றும். இதனால் சீனாவின் மீது சார்ந்திருப்பது குறையும். QUAD நாடு கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா, பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு (RCEP) இல் இருந்து இந்தியா வெளிவரும் முடிவில் அந்த அளவு மகிழ்ச்சியுடன் இல்லை.

இப்பொழுது QUAD பொருளாதார சக்தியாக உருவெடுத்தால் இந்த பிராந்தியம் முழுவதற்குமே இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பிராந்தியம் கடந்த காலத்தில் பல பல தரப்பு மற்றும் குறுதரப்பு கூட்டணிகளை கொண்டிருக்கிறது. கிழக்கு ஆசிய மாநாடு, ஆசிய பாதுகாப்பு அமைப்பு, மற்றும் பல ஆண்டுகள் பழமையான APEC ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

ஆனால் இத்தகைய அமைப்புகள் வெறும் வாய்ப்பேச்சுடன் நின்றுவிட்டது. எந்த முடிவுகளையும் கொடுக்கவில்லை.

QUAD இந்த வழியில் செல்லாமல் இருக்க வேண்டுமானால் பிரச்சனையை நேருக்கு நேராக சந்திப்பதில் உறுதியுடன் இருக்க வேண்டும். இந்தோ-பசுபிக் பிராந்திய சர்ச்சைகள் ஆரம்பிக்கிறது. ஏற்கனவே ஒரு பனிப்போர் ஆரம்பித்துவிட்டது.

சீனாவின் தலைவரான ஜீ ஜிங் பிங் காலமும் நேரமும் தன் பக்கம் இருப்பதாக நம்புகிறார். தங்களுடைய ராணுவ வலிமையை அவர் முரட்டுத்தனமாக காண்பிக்கிறார்.

அக்டோபர் 1, 2019 அன்று சீனாவின் 75வது நிறுவன நாளன்று, தங்களுடைய ராணுவ வலிமையை பிரம்மாண்டமாக சீன தலைநகர் பெய்ஜிங் தெருக்களில் காண்பித்தனர்.

இது சீனா எந்த அளவுக்கு ராணுவ ரீதியில் தயாராக இருக்கிறது என்பதை அறிவிக்கும் வழியாகும். இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனா விரிவான உள்கட்டமைப்புகளை உருவாக்கி இருக்கிறது. அதனுடைய பொருளாதார வலிமை ஒரு ஆயுதமாகும். இப்படிப்பட்ட சீனாவை எதிர்கொள்வதற்கு அந்தப் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளும் தங்களுடைய மூலோபாய நடவடிக்கைகளை தொடங்கிவிட்டன.

அமெரிக்கா ஹவாய் முதல் குவாம் முதல் ஒகினாவா, டியாகோ கார்சியா முதல் ஜிபூட்டி வரை தளங்களைக் கொண்டுள்ளது.

ஜிபூட்டியில் ஜப்பான் ஒரு தளத்தைக் கொண்டுள்ளது மற்றும் பல்வேறு இந்தோ-பசிபிக் தளங்களில் ரோந்துப் பணிகளை அதிகமாக செய்கிறது.

ஆஸ்திரேலியா கோகோஸ் மற்றும் கிறிஸ்துமஸ் தீவுகளில் அதன் புறக்காவல் நிலையங்களைக் கொண்டுள்ளது. இது மலேசியாவின் பட்டர்வொர்த் தளத்திலிருந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

பிரான்ஸ் அதன் தளங்களை ரீயூனியன் மற்றும் நியூ கலிடோனியாவில் கொண்டுள்ளது. பிரிட்டனில் டியாகோ கார்சியா உள்ளது. இந்தியாவும் சபாஹர், சிட்டகாங், கொழும்பு மற்றும் சிட்வே ஆகிய இடங்களில் துறைமுகங்களை உருவாக்கி வருகிறது. ஜிபூட்டியில் அதன் வசதியை அணுக ஜப்பானுடன் ஒரு ஒப்பந்தம் உள்ளது. மொரீஷியஸில் உள்ள வடக்கு அகலேகா தீவில் இந்தியா ஒரு இராணுவ தளத்தையும் கட்டி வருகிறது.

எனவே இந்தோ-பசிபிக் பகுதியில் ராணுவ மயமாக்கம் தொடர்கிறது. சீனா அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்கள் டஜன் கணக்கில் கடலில் வைத்துள்ளது. இந்தியாவும் தன்னுடைய அரிஹண்த்களை வைத்துள்ளது. அமெரிக்கா மற்றும் பலரும் தங்கள் சொந்த அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை வைத்துள்ளன.

அணு ஆயுத போர் என்பது நடக்கவே நடக்காத ஒன்று என்று கூறி விட முடியாது. அதை தவிர்ப்பது தொடர்ந்து நடக்கும் பேச்சுவார்த்தையைப் பொறுத்தது.

இந்தியாவும் சீனாவும் இதுவரை எந்த இராணுவ மயமான கூட்டணியும் வைத்துக்கொள்ளவில்லை. இந்த போட்டியை இராணுவமயமாக்காமல் இருப்பதே சிறந்தது.

கடைசியாக சிங்கப்பூர் பிரதமர் லீ கூறியதையும் கருத்தில் கொள்ளவேண்டும். "ஆசிய பசிபிக் நாடுகள் சீனா அல்லது அமெரிக்கா இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கும்படி கட்டாயப்படுத்தப் படக்கூடாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

- Senior BJP leader Ram Madhav for Hindustan Times.


Tags:    

Similar News