செலவை கட்டுப்படுத்த இரவு உணவை தவிர்த்தேன் - ஐ.பி.எஸ் படித்த அனுபவத்தை மாணவர்கள் மத்தியில் பகிர்ந்த அண்ணாமலை
'கடன் வாங்கித்தான் எம்.பி.ஏ படித்தேன், மாதக் கடைசி நாட்களில் செலவை கட்டுப்படுத்துவதற்காக இரவு உணவை தவிர்த்தேன்' என மாணவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
'கடன் வாங்கித்தான் எம்.பி.ஏ படித்தேன், மாதக் கடைசி நாட்களில் செலவை கட்டுப்படுத்துவதற்காக இரவு உணவை தவிர்த்தேன்' என மாணவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
சென்னையில் தினமலர் நாளிதழ் மற்றும் கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து நடத்தும் நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ் என்ற நிகழ்ச்சியில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிகள் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும் தற்போதைய பா.ஜ.க தலைவருமான அண்ணாமலை பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, 'இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வு என்பது அதற்கு தயாராவது என்பது ஒரு தவம் போன்றது. அது வேலைக்கான படிப்பு அல்ல நாட்டின் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கான பயிற்சி. இந்த பயிற்சி இந்தியாவில் எந்த நிலையில் எந்த மூலையில் உள்ளவரும் எடுத்து பெறமுடியும். நாட்டின் உயரிய பதவிக்கான அந்தஸ்தை அடைய முடியும், அதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.
நான் கரூர் விவசாய குடும்பத்தில் பிறந்தவன், இன்ஜினியரிங் முடித்ததும் வேலைக்கு சென்று வருமானம் ஈட்டி தருவேன் என குடும்பத்தினர் நினைத்தனர் என் படிப்புக்கும் மேற்கொள்ளும் பணிக்கும் தொடர்பு இல்லாதது போல் எனக்கு தோன்றியதால் வேலைக்கு செல்லவில்லை. சொந்தமாக வணிகம் செய்யலாம் என லக்னோவில் 8.5 லட்சம் ரூபாய் கடன் பெற்று எம்.பி.ஏ படித்தேன் அதன்பின் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாரானேன்.
என் செலவுகளை சமாளிக்க ஒரு பயிற்சி நிறுவனத்தில் வகுப்பெடுத்து மாதக் கடைசி நாட்களில் செலவை கட்டுக்குள் வைப்பதற்காக இரவு உணவை தவிர்த்து இருக்கிறேன். அதற்காகவே மதிய நேரங்களில் முழு சாப்பாடு கிடைக்கும் உணவகங்கள் தேடி சென்றிருக்கிறேன். இப்படியெல்லாம் தேவைகளை குறைத்துக் கொண்டு பயிற்சி பெற்ற போதும் யு.பி.எஸ்.சி போட்டி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற என் கனவை விடவில்லை. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வு என்பது வெறும் ஊழியத்திற்கான தேர்வு கிடையாது நம் நாட்டின் உயரிய பதவிகளையும் பொறுப்புகளையும் ஏற்று நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் வாய்ப்பு' என மாணவர்கள் மத்தியில் பேசினார் அண்ணாமலை.