இலங்கை ஹம்பன்தோட்டா துறைமுகம் 99 வருடம் சீனாவுக்கு குத்தகை - பின்னணியும் விளைவுகளும்!

Update: 2021-07-13 12:54 GMT

தெற்கு இலங்கையில் அமைந்துள்ளது ஹம்பாந்தோட்டா என்ற சிறிய மாவட்டம். உலகின் மிகச்சிறந்த துறைமுகங்களில் ஒன்றைக் கொண்டிருப்பதாக இது கருதப்படுகிறது. சமீப காலங்களில் செய்திகளில் இந்தப்பெயர் அடிக்கடி இடம்பெறுகிறது.

ஹம்பாந்தோட்டா அமைந்துள்ள இடம் மூலோபாய (strategic) மற்றும் பொருளாதார ரீதியில் பல நன்மைகளை கொண்டுள்ளது. ஏனெனில் இது மலாக்கா நீரிணையின் முக்கிய சர்வதேச கப்பல் பாதைக்கும், சூயஸ் கால்வாய்க்கும் இடையிலான பாதையில் உள்ளது, இது ஆசியாவை ஐரோப்பாவுடன் இணைப்பதற்கான முக்கியமான இணைப்பாகும்.

தற்போதுள்ள கொழும்பு துறைமுகத்தின் மேலுள்ள சுமையை குறைப்பதற்காகவும், பங்குதாரர்களின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை உயர்த்துவதற்காகவும் ஹம்பாந்தோட்டாவில் ஒரு புதிய துறைமுகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த துறைமுகத்தில் ஒரு பதினைந்து மாடி நிர்வாக வளாகம், திரவ பெட்ரோலிய எரிவாயுவை அடைக்கும் வசதிகள், தொட்டி பண்ணைகள், ஒரு அணை மற்றும் இரண்டு பெரிய 600 மீ general purpose berths மற்றும் பல வசதிகள் உள்ளன. இது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திட்டமிடப்பட்ட ஒரு கனவுத் திட்டமாகும். அவர் ஹம்பாந்தோட்டா நகரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை, சீனாவிடமிருந்து வாங்கிய கடனை அடைக்க முடியாமல், தற்போது இந்த 15,000 ஏக்கர் நிலப்பரப்பை China Merchants Port Holdings (CMPort) என்ற நிறுவனத்திற்கு 99 வருட குத்தகைக்கு விட்டு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி திரட்டியுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பிரதேசப் பகுதிகளில் கால்பதிக்க சீனாவால் தீட்டப்பட்ட, கவனமாக வடிவமைக்கப்பட்ட சதித்திட்டம் போல் இது தெரிகிறது. ஸ்ட்ரிங் ஆஃப் பெர்ல்ஸ் (String of Pearls of China) என்பது இந்தியப் பெருங்கடல் பகுதிகளைக் கைப்பற்ற முயலும் சீனாவின் நன்கு அறியப்பட்ட கோட்பாடாகும்.

சீனர்கள், ஹம்பாந்தோட்டாவில் பெரும் ராணுவ இருப்பைக் கொண்டு,மூலோபாய ரீதியில் முக்கியத்துவமிக்க போஸ்ட்களை (post) உருவாக்க முடியும்.  

இலங்கை கடற்படைக்கு ஒரு போர் கப்பலை சீனர்கள் பரிசாக வழங்கலாம் என்பது குறித்த சமீபத்திய அறிக்கை, வரும் ஆண்டுகளில் என்ன நடக்கலாம் என காட்டுகிறது. ஒருவேளை நமக்கு அருகில் சீனா ஒரு கடற்படை அவுட்போஸ்ட் கட்டும் திட்டத்தின் ஆரம்ப கட்டமாக இருக்கலாம். ஹம்பாந்தோட்டா துறைமுகத்தின் செயல்பாடு பொதுமக்கள் நோக்கங்களுக்காக இருக்கும் என்று இலங்கை திங்க் டேங்க் நிபுணர்கள் உறுதியளித்தாலும், பல நாடுகளுடன் சீனா கொள்ளும் கூட்டுறவுகளை நாம் ஆராய்ந்து பார்த்தோமானால், உண்மை, பல பொய்களின் கீழ் மறைக்கப்பட்டிருப்பதை நாம் அறியலாம்.

துறைமுகம் துவங்கியதிலிருந்து ஆண்டுக்கு ஆண்டு ஏற்கனவே இழப்புக்களைச் சந்தித்து வருகிறது. எனவே இது விரைவில் மூலோபாய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம். இலங்கை ஏற்கனவே தனது கடற்படைத் தளத்தை காலியில் இருந்து ஹம்பன்டோட்டாவிற்கு மாற்ற முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது நிகழும்போது, ​​தற்போதுள்ள உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக உதவி செய்வதை போல் செய்து வணிக மற்றும் இராணுவ ஆதாயங்களுக்காக உளவுத்துறை புறக்காவல் நிலையத்தின் வளர்ச்சிக்கு விரைவில் சீனா அடிகோலும். 

ஹம்பாந்தோட்டாவிற்கும் கன்னியாகுமரிக்கும் இடையிலான தூரம் சுமார் 250 கடல் மைல் ஆகும்: அதாவது சீனா இந்தளவு இந்திய கடல் கடற்கரைக்கு மிக அருகில் இருந்ததில்லை. இது இந்தியாவிற்கு ஒரு பெரிய கவலையாக உள்ளது, சீன கடற்படை நடவடிக்கைகள் கடற்கரைக்கு அருகாமையில் இருப்பது ஒரு பெரிய சவாலாக உள்ளது.

கிழக்கு கடலில் நம் கடற்படை நடவடிக்கைகளுக்கும் இது பல சவால்களை முன்வைக்கிறது. ஹைட்ரோகிராஃபிக் உளவுத்தகவல்களை சேகரிக்க மூன்றாம் தரப்பு கப்பல்களை சீனர்கள் நிறுத்தியதாக அறிக்கைகள் வெளியானது. இப்பகுதியில் சீனா தங்கள் சொந்த அவுட்போஸ்ட்களை ஹனுமான்தோட்டா துறைமுகம் மூலம் பெறுமானால் இத்தகைய மூன்றாம் தரப்பு கப்பல்கள் அவர்களுக்கு தேவையில்லை.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் கீழ் கடல்சார் பாதுகாப்பு குறித்து, இலங்கையுடன் பன்முக முத்தரப்பு சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இத்தகைய சந்திப்புகள் 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் என்ற முடிவு வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (SAGAR) கொள்கை, இலங்கையை கடலோர பாதுகாப்பில் ஒருங்கிணைக்கும் திட்டம், இலங்கையுடன் கூட்டு கடற்படை பயிற்சிகள் மற்றும் தொலைநோக்குடன் கூடிய இராஜதந்திரம் ஆகியவை காலத்தின் தேவையாகும். பிராந்திய மற்றும் கடல்சார் நலன்களைப் பாதுகாக்க எடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள் நமது கடல்பரப்பை பாதுகாக்கும்.


Tags:    

Similar News