அத்யாவசியப் பொருட்களுக்கு நீண்ட வரிசை- இலங்கையில் பொருளாதார அவசரநிலை !
பால் பவுடர், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக கடைகளுக்கு வெளியே நீண்ட வரிசைகள் உருவாகின.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று (ஆகஸ்ட் 31), இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தொடர்ந்து உயரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பொருளாதார அவசரநிலையை அறிவித்தார். இலங்கையின் ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்ததால் உணவு விலை அதிகரித்த பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இந்த அவசரநிலை அமலுக்கு வந்தது.
சர்க்கரை, அரிசி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பல தினசரி பயன்பாட்டு பொருட்களின் கூர்மையான விலை உயர்வை தொடர்ந்து இந்த அவசரநிலை அறிவிக்கப்பட்டது. பால் பவுடர், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக கடைகளுக்கு வெளியே நீண்ட வரிசைகள் உருவாகின.
அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைப்பதைத் தடுப்பதற்காக பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஒரு முன்னாள் இராணுவ ஜெனரலை அத்தியாவசிய சேவைகளின் ஆணையராக நியமித்துள்ளது, வர்த்தகர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அவற்றின் விலையை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களில், இலங்கை ரூபாயின் வீழ்ச்சி மற்றும் கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்பட்ட உலகளாவிய சந்தை விலைகள் காரணமாக பெரும்பாலான அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்ததாக இலங்கையின் உள்ளூர் செய்திகள் கூறுகின்றன. இந்த ஆண்டு அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாய் 7.5% சரிந்துள்ளது. அத்யாவசியப் பொருட்களை பதுக்குவதாக வியாபாரிகள் மீது அரசு குற்றம் சாட்டுகிறது.
ஜூலை மாத இறுதியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2.8 பில்லியன் டாலராக குறைந்தது. 2019 நவம்பரில் புதிய அரசு பதவியேற்றபோது வெளிநாட்டு கையிருப்பு 7.5 பில்லியன் டாலர்களாக இருந்தது. மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 20% க்கும் அதிகமாக சரிந்துள்ளது.