இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இலங்கை அரசாங்கம் பர்தா அணிவதற்கு தடை விதித்தது எனக் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம், இத்தகைய ஒரு கொள்கை பரிசீலனையில் மட்டுமே உள்ளதாகவும், நடைமுறைக்கு வரவில்லை என்றும் தெளிவுபடுத்தினர்.
மேலும், "இதுகுறித்து சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் ஒரு பரந்த உரையாடல் நடத்தி எந்த முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பு ஒருமித்த கருத்தை எட்ட தேவையான ஆலோசனைகள் நடைபெறும்" என்றும் உறுதி அளித்தனர்.
இலங்கை வெளியுறவு துறை செயலர் ஜெயநாத் கொலம்பேஜ் இதுகுறித்துக் கூறுகையில், இதுபோன்ற தடையை விதிக்க அரசாங்கம் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும், இந்தப் பரிசீலனை விவாதத்தின் கீழ் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அமைச்சக செய்தித் தொடர்பாளர் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் கூறுகையில், இது சம்மந்தமான உரையாடல்கள் சரியான நேரத்தில் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இலங்கை பொது இடங்களில் முழு முகம் அணியும் பர்தா மற்றும் நிக்காப்களை தடை செய்து விட்டதாக வெளியான அறிவிப்புகள் குறித்து பல நாடுகளில் ஆதரவும், முஸ்லிம் நாடுகளில் எதிர்ப்பும் நிலவியது. இலங்கை அரசு மறுபடியும் நிதானமாக யோசித்து இந்த தடையை வேறுவகையில் கொண்டுவர முடிவு செய்யலாம். ஏனெனில் உலகம் முழுக்க இந்த விவாதங்கள் நடைபெற்று முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது.
உதாரணமாக ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் இந்த விவாதங்கள் பரவி வருகின்றன. மார்ச் 7, 2021ல் பொது இடங்களில் முகங்களை மறைப்பது (முஸ்லிம் பெண்களால் அணியப்படும் பர்தா, நிகாப் அனைத்தையும் சேர்த்து) தடை செய்ய வேண்டும் என சுவிட்சர்லாந்து வாக்காளர்கள் ஓட்டளித்தனர்.
கடந்த 10 ஆண்டுகளில் பல ஐரோப்பிய நாடுகள் பர்தாவை முழுவதுமாக தடை செய்யவோ அல்லது முழு முகத்தை மூடுவதை மட்டும் தடை செய்யவோ பல சட்டங்களை இயற்றியுள்ளன. உதாரணமாக பிரான்ஸ், பெல்ஜியம், பல்கேரியா, டென்மார்க் மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள். பல ஐரோப்பிய நாடுகளில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற குறிப்பிட்ட சூழல்களுக்கு பர்தா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.