மொழிப்போர் தியாகிகளின் தியாக வரலாற்றை அபகரிக்கும் ஸ்டாலின்!

மொழிப்போர் தியாகிகளின் தியாக வரலாற்றை அபகரிக்கும் ஸ்டாலின்!

Update: 2021-01-26 11:25 GMT

ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர் அக்கட்சியின் வரலாற்றை பற்றி பேசுவது தவறில்லை, ஆனால் நடந்த அனைத்து நிகழ்வுகளுமே தன் கட்சியினால் மட்டுமே நடந்தது என கூறுவது அறியாமை மட்டுமல்ல மக்களிடத்தில் உண்மையை மறைக்கும் கள்ளத்தனமும் கூட. இப்படி ஓர் செயலை மொழிப்போர் தியாகிகளின் வரலாற்றை தனக்கு மட்டுமே சாதகமாக மற்றி கூறுவதன் மூலம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் செய்துள்ளார்.

திருவொற்றியூர் பெரியார் நகரில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் நாள் கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், "மொழிப்போராட்டத்தில் உயிர் விட்டவர்கள் அத்தனை பேருமே திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் என்பது பெருமை அளிப்பதாக உள்ளது" என கூறியுள்ளார். அதாவது தி.மு.க வை சேர்ந்தவர்கள் மட்டுமே மொழிப்போர் போராட்டத்தில் பங்கேற்று உயிர் விட்டதை போல் நடந்த வரலாற்றை தன் பெருமை பேச மாற்றி கூறியுள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

மொழிப்போர் போராட்டம் வரலாறு என்பது 1937ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று சென்னை மாகாணத்தின் (தற்போதைய தமிழகத்தையும், தெற்கு ஆந்திரா பகுதிகளையும் உள்ளடக்கியது பகுதிகள் அனைத்தும்), முதலமைச்சராக ராஜாஜி ஜூலை 14'ம் தேதி பதவியேற்றார். பின் ஒரு மாத காலத்தில் 11 ஆகஸ்டு 1937 அன்று பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்க இருக்கப்பட இருப்பதை கொள்கை அறிக்கையாக வெளியிட்டார்.

அதன் பின் வெடித்ததே போராட்டம். மறைமலை அடிகள், பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியோர் திருச்சியில் முதலாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்கள். 1939ல் பேரணியில் பங்கேற்றதற்காக காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தாளமுத்து மற்றும் நடராஜன் ஆகியோர் காவல் நிலையத்திலேயே இறந்தனர்.

இப்படியாக தமிழகத்தில் முதல் மொழிப்போர் போராட்டம் வெடித்தது. பின் 1965 சனவரி 26 முதல் இந்தியை நாட்டின் ஆட்சி மொழியாக்குவது என்று மத்திய அரசு முடிவெடுத்தது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இப்படியாக மொழிப்போர் போராட்டம் என்பது இப்பொழுது தி.மு.க நடத்தும் பிரச்சார கிராமசபை கூட்டங்கள் போல் வடிவமைக்பப்பட்டது அல்ல எப்பொழுதெல்லாம் மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கிறதோ அப்பொழுதெல்லாம் நடத்தப்பட்டவையே மொழிப்போர் போராட்டங்கள்.

ஆனால் இப்படியாப்பட்ட போராட்டத்தின் வரலாறு தெரியாமல் ஏதோ மொழிப்போர் தியாகிகள் அனைவரும் தி.மு.க உறுப்பினர்கள் போல தி.மு.க தலைவர் சித்தரிக்க முயல்வது அறியாமையா? அல்லது அரசியல் சுயலாப தன்மையா? அல்லது எப்படியாவது மக்களை ஏமாற்றிவிடலாம் என்ற கள்ளத்தனமா? 

மொழிப்போர் போராட்டத்தில் முதன் முதலில் காவல்துறை பாதுகாப்பில் இருக்கும்போது உயிர்விட்ட தாளமுத்து மற்றும் நடராசன் இறந்தது 1939'ம் ஆண்டு. 1938'ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கைது செய்யப்பட்ட நடராசன் 1939'ல் ஜனவரி மாதத்தில் இறந்தார். 1939 பிப்ரவரி மாதத்தில் கைது செய்யப்பட்ட தாளமுத்து 1939 மார்ச் மாதம் இறந்தார். 

ஆனால் நேற்றைய தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியது, "மொழிப்போராட்டத்தில் உயிர் விட்டவர்கள் அத்தனை பேருமே திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள்". தி.மு.க துவங்கப்பட்ட ஆண்டே 1949 தான் என்பதை ஸ்டாலினுக்கு கூற ஆட்கள் இல்லையா?

அல்லது வார்த்தைக்கு வார்த்தை கருணாநிதி மகன் என கூறுபவர், நேற்றைய பிரச்சார துவக்க அறிவிப்பை கருணாநிதியின் வீட்டின் முன் அறிவித்த அவர் மகன் ஸ்டாலின் இப்படி கூறலாமா? 

தி.மு.க'விற்கு அரசியலில் மக்களை ஏமாற்றுவதுதான் தலையாய பணியா தி.மு.க தலைவரே?

Similar News