தலிபான்களுடன் உறவாடும் சீனா- ஆப்கானிஸ்தான் தாங்குமா?
China-Taliban relationship, doomed Afganisthan?
தெற்காசியாவில் பல முக்கியமான அரசியல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. இவை உலகநாடுகளுக்கு, குறிப்பாக இந்தியாவின் எதிர்காலத்தில், கொள்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில நாட்களுக்கு முன்பு வரை தலிபான்களை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் சிலநாடுகளின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தற்போது இந்த கொடூரவாதிகள் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் ஒசாமா பின்லேடன் உட்பட தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது உலகறிந்த செய்தி. தலிபான்கள் 1400களின் மனநிலையில் இருக்கும் காட்டுமிராண்டி கும்பல். ஷரியா மற்றும் காலிபாவை நிலைநிறுத்த முயலும் இவர்கள் ஹக்கானி நெட்ஒர்க், அல்கொய்தா, LeT, ISIS ஆகியோரின் கலவையாகும்.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்ற பாகிஸ்தான் தனது உளவுத்துறை அமைப்பான ISI மூலம் பெரும் ஆதரவு அளிக்கிறது.
இதில் மற்றொரு தீய சக்தியும் தற்போது இணைவது போல் தெரிகிறது. சீன ஸ்டேட் கவுன்சிலரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யி இந்த வாரம் தியான்ஜின் சீனாவில், தலிபான் அரசியல் பிரதிநிதி முல்லா அப்துல் கனி பரதர், மத ஆணையம் மற்றும் சில பிரதிநிதிகளை சந்தித்தார்.
சீனாவிற்கு ஆபத்து விளைவிக்க நினைக்கும் எந்த வித சக்தியும் ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்த தலிபான் அனுமதிக்கவில்லை என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது. சீனாவிலிருந்து தனியாக பிரிய நினைக்கும் கிழக்கு துர்கெஸ்தான் இஸ்லாமிய இயக்கம் (ETIM) அல்லது எந்த சீன எதிர்ப்பு சக்திகளும் எதிர்காலத்தில் தலிபான் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தானில் ஊக்குவிக்கப்பட மாட்டாது எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
சீனத் தரப்பிலிருந்து, ஆப்கானிஸ்தானில் அமைதியை ஊக்குவிக்க விரும்புவதாகவும், போரால் பாதிக்கப்பட்ட அந்நாட்டின் எதிர்கால சீரமைப்பில் தங்களுக்கு ஒரு பெரிய பங்கு இருப்பதாகவும் கூறப்பட்டது. பாகிஸ்தானுக்கு ஆதரவு தருவது போல சர்வதேச மன்றத்தில் சீனா அவர்களுக்கு ஆதரவளிக்கும் எனவும் உறுதியளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆப்கானிஸ்தானுடனான சீனாவின் எல்லை வடகிழக்கு வாகான் மாவட்டத்தில் உள்ள படாக்ஷான் மாகாணத்தில் தொடங்குகிறது. ஜனாதிபதி அஷ்ரப் கானியின் கீழ் ஆப்கானிஸ்தான் ஜனநாயக ஆட்சியில் சீனாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அமெரிக்க படையினர் திரும்பப் பெறத் தொடங்கியவுடன், தலிபான்கள் சின்ஹியாங் பிராந்தியத்துடன் இணைந்துள்ள வடகிழக்கு படாக்ஷான் மாகாணத்தை தாக்கிக் கைப்பற்றி வருகின்றனர்.