தொழிலாளர் தினம் பிறந்த கதை!

உலகமெங்கும் மே 1-ஆம் தேதியை தொழிலாளர் தினமாக கொண்டாடி வருகிறோம். இதற்கான அடிப்படை காரணமும் பிறந்த கதையும் பற்றி காண்போம்.

Update: 2024-05-01 11:26 GMT

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள். மே மாதம் நான்காம் தேதி 1886 அன்று அமெரிக்காவின் சிக்காகோ நகரில் வெடித்த கலவரம் தொழிலாளர் உரிமைக்கு வழி வகுத்தது. சிகாகோ நகரில் 1886-ஆம் வருடம் மே மாதம் ஒன்றாம் தேதி முதல் 16 மணி வேலை நேரத்தை 8 மணி நேரமாக மாற்ற வேண்டுமென்று தொடர் போராட்டம் தொடங்கியது .இதன் பின்னணி என்ன என்பதை பார்ப்போம். அமெரிக்க உள்நாட்டு போருக்கு பிறகு தொழில் உற்பத்தி அமெரிக்காவில் பெருக ஆரம்பித்தது.

சிக்காகோ அமெரிக்காவில் ஒரு முக்கியமான தொழில் நகரம். இங்கு ஜெர்மனி மற்றும் பல நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வந்த மக்கள் லட்சக்கணக்கானவர்கள் வேலையில் இருந்தனர். ஆறு நாள் வேலை அதுவும் 10 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வேலை. இந்த நிலையை மாற்ற தொழிலாளர்கள் நின்றுள்ளனர். இதை அடக்குவதற்கு முதலாளிகள் கூலிப்படை அடியாட்களைக் கொண்டு தாக்குவது உரிமை கேட்பவர்களை வேலையில் இருந்து நிறுத்துவது பல நாடுகளில் இருந்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் இடையே பிரிவினையை தூண்டுவது என்று பலவித செயல்களில் ஈடுபட்டனர் .

'எட்டு மணி நேரம் வேலை எட்டு மணி நேரம் ஓய்வு எட்டு மணி நேரம் எங்கள் நேரம்' என்ற பாடலுடன் உழைக்கும் வர்க்கத்தினர் பொது வேலைநிறுத்தம் மே மாதம் 1ஆம் தேதி தொடங்கியது. அமைதியான முறையில் நடந்து கொண்டிருந்த போராட்டத்தில் மூன்றாம் தேதி காவல்துறையை அடக்குமுறையால் ஒரு தொழிலாளர் கொல்லப்பட்டார். மே மாதம் நான்காம் தேதி தொழிலாளர் கூட்டத்தை கலைக்க 200 காவலர்கள் கொண்ட படைவந்தது. கையில் அத்தியுடன் காவல் படை தொழிலாளர்களை நோக்கி முன்னேற தொழிலாளர் கூட்டத்திலிருந்து காவல் படையின் மீது குண்டு வீசப்பட்டது .

இந்த குண்டு வீச்சில் எட்டு காவலர்கள் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். அரசு அடக்கு முறையை கட்டவிழ்த்தது. புலம்பெயர்ந்து வந்திருந்த அராஜகவாதிகளையும் அவர்களுக்கு துணை நின்ற இடதுசாரி தீவிரவாதிகளையும் அரசு சிறையில் அடைத்தது .இந்த போராட்டத்தால் தொழிலாளர் கோரிக்கைகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது. அதே சமயம் இந்த நிகழ்வு அமெரிக்காவில் தொழிலாளர் சங்கம் தொடங்க வடிவமைத்தது.தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கவும் அவர்களின் உரிமைக்காக போராடவும் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற அமைப்பு தொடங்கியது .

இது நடந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு 1916 ஆம் வருடம் தொழிலாளர் கோரிக்கையான எட்டு மணிநேர வேலை நேரம் என்பதை அமெரிக்க அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. தொழிலாளர்களின் அடிப்படை உரிமையை முன்வைத்து தொழிலாளர் போராட்டம் தொடங்கிய தினமே மே மாதம் ஒன்னாம் தேதி உலக தொழிலாளர்கள் தினம் என்று உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Similar News