The Kashmir Files: பனி உறையும் தேசத்தில் ரத்தம் உறைந்த உண்மை சரித்திரம்!
தற்காலத்தில் வெளியாகும் பாலிவுட் திரைப்படங்கள் எல்லாம் குப்பைக்குச் சமமானவை என்றால் மிகையாகாது. பிரம்மாண்டத்தையும், தென்னிந்தியாவில் வாழும் மக்களை நக்கலடிப்பதையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அதில் உருப்படியாக ஒன்றுமில்லை என்பதே உண்மை. ஆனால் அவ்வப்போது சில நல்ல படங்களும் விதிவிலக்காக வெளிவருகின்றன. அப்படி வெளிவந்திருக்கும் ஒரு திரைப்படம் தான் "The Kashmir Files".
தனது சொந்த நாட்டிலேயே அகதியாக வாழும் அவலநிலைக்குத் தள்ளப்பட்ட காஷ்மீர் பண்டிட்களின் நிலையைப் பற்றியும், அவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமையைப் பற்றியும் பேசுவதற்கு 30 ஆண்டுகள் கழித்து தான் தைரியம் வந்திருக்கிறது போல. காஷ்மீரின் பூர்வகுடியான பண்டிட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலையை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் படமாக எடுத்திருக்கிறார்கள்.
படத்தின் முதல் காட்சியிலேயே இஸ்லாமிய தீவிரவாதி ரத்தம் கலந்த உணவை ஒரு ஹிந்து பெண்மணியை வற்புறுத்தி உண்ண வைப்பதன் மூலம் படத்தின் நோக்கத்திற்கு நம்மை தயார் செய்துவிடுகிறார்கள். இக்காட்சியே இப்படம் கொஞ்சம் கூட கலப்பட்டமற்ற உண்மை சம்பவங்களின் வெளிப்பாடு என்பதற்கு ஓர் உதாரணம்.
படத்தின் மையக்கரு ரொம்ப எளிமையானது. க்ருஷ்ணன் பண்டிட், காஷ்மீர் பண்டிட் இனப்படுகொலைக்குப் பிறகான முதல் தலைமுறையைச் சேர்ந்தவர், இனப்படுகொலை என்பது வெறும் கட்டுக்கதை. பெரும் வெளியேற்றம் மட்டுமே நடந்தது என்று நினைக்கிறார். அதனால் சில வருடங்களுக்கு முன்பு இந்திய அரசாங்கம் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ததை எதிர்த்து போராட நினைக்கிறார்.
க்ருஷ்ணனின் தாத்தா இறப்பின் போது காஷ்மீர் இனப்படுகொலையில் தப்பி உயிர்பிழைத்த அவருடைய நண்பர்கள் ஒன்று கூடுகிறார்கள். அங்கிருந்து கதை பின்னோக்கி சென்று, ஒரு காலத்தில் காஷ்மீர் எப்படி ஞானத்தின் பீடமாக விளங்கியது என்பதில் முடிகிறது.
வெகு சில படைப்பாளர்கள் மட்டுமே எவ்வித கலப்படமும் இல்லாமல் சொல்ல வந்த கருத்தை திரைப்படமாக எடுக்கத் துணிகிறார்கள். விவேக் அக்னிஹோத்ரி இப்படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் எவ்வளவு கொடூரமாக கொல்லப்பட்டார்கள் என்பதையும், அதை மறைக்க முயற்சி செய்த செய்கின்றன ஒரு மாஃபியா கும்பலின் முகத்திரையை அழுத்தமான வசனங்கள் மூலம் கிழித்து தொங்கவிட்டிருக்கிறார்.