மேற்கு வங்காளத்தில் தொடரும் திரிணாமூல் காங்கிரசின் அராஜகம் - மக்கள் கொந்தளிப்பு!
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களின் முடிவுகள் மே 2ஆம் தேதி வெளியானது. இதில் கேரளாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டனர். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார். அசாமில் பா.ஜ.க ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. புதுச்சேரியிலும் தமிழகத்திலும் மட்டும் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தன.
இதில் மற்ற நான்கு மாநிலங்களும் மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு அமைதியுடன் சென்று கொண்டிருக்கும் வேளையில், மேற்கு வங்காளத்தில் மட்டும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் எதிர்க்கட்சிகளின் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
இரண்டு நாட்களாக மேற்கு வங்க தெருக்களில் வன்முறை தலை விரித்தாடுகிறது. கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பா.ஜ.க என அனைத்து எதிர்க்கட்சிகளையும் திரிணாமூல் குண்டர்கள் விட்டு வைக்கவில்லை என்றாலும், இதில் அதிகம் பாதிக்கப்பட்டது பா.ஜ.கவினர் தான். பா.ஜ.க அலுவலகங்கள் எரிப்பு, பெண்களை பலவந்தப்படுத்துதல், பாஜக தொண்டர்களை படுகொலை செய்வது என அவர்களது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பற்ற சூழல் உருவானது.
காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒதுங்கிக் கொண்டனர். முடிவுகள் வந்த நாளிலிருந்து வன்முறை தலைவிரித்து ஆடுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் எச்சூரி மற்றும் அங்குள்ள காங்கிரஸ் தலைவர்களும் இது குறித்து கண்டனங்களை எழுப்பி வரும் வேளையில், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி இன்னும் மம்தாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறது.
ஒரு வழியாக சசிதரூர் கூட நடந்த வன்முறைகளை ஒப்புக்கொள்ளும் அளவிற்கு விவகாரம் கையை மீறி சென்றது. பா.ஜ.க தொண்டர்கள் பக்கத்து மாநிலமான அசாமுக்கு தப்பித்து தங்கள் குடும்பங்களுடன் செல்லும் அளவிற்கு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அராஜகம் தொடர்கிறது. இதுகுறித்து இரண்டு நாட்களாக #BengalBurning #BengalViolence என்ற ஹாஷ்டாக்கள் பல்வேறு வீடியோக்கள் புகைப்படங்களுடன் வலம் வந்து கொண்டிருக்கின்றன.