சிறுபான்மையினரின் உடல் உறுப்புகளை விற்கும் சீனா - பகீர் குற்றச்சாட்டை கிளப்பும் ஐ.நா!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் நிபுணர்கள் (UN Rights Experts) இந்த வார ஆரம்பத்தில் சீனாவில் தடுத்து வைக்கப்படும் (Detained) சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு, அவர்களுடைய அங்க உறுப்புகள் களவாடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தங்களுக்கு நம்பத்தகுந்த தகவல்கள் இருப்பதாக வெளிப்படுத்தினர். இதை சீனா கடுமையாக மறுத்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் 12 தனித்துவமான நிபுணர்கள் இத்தகைய குற்றச்சாட்டுகளால் தாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்தனர். இவர்கள் ஐக்கிய நாடுகளின் சார்பாக அதிகாரப்பூர்வமாக பேச அங்கீகரிக்கப்பட்டவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் இப்படி தடுத்து வைக்கப்படும் சிறுபான்மை சமூகத்தினர் கட்டாயப்படுத்தப்பட்டு, இரத்தப் பரிசோதனைகள், அல்ட்ராசவுண்டு போன்றவைகள் எந்த ஒப்புதலும் இல்லாமல் திணிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இத்தகைய சோதனைகள் முடிவுகள் அங்க உறுப்புகளின் மூலதனமாக பதிவேடுகளில் குறிப்பிடப்படுகின்றன.
இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், குறிப்பாக இன மொழி மத சிறுபான்மையினர் கட்டாயப்படுத்தப்பட்டு அங்க உறுப்புகள் நீக்கப்படுவது தொடர்கிறது என்கின்றனர். இவர்கள் எந்தவித காரணங்களும் தெரிவிக்கப்படாமல் கைது செய்யப்படுவதாகவும் அரெஸ்ட் வாரண்ட் கூட இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். இப்படி தடுத்து வைக்கப்பட்டவர்கள் இந்த அளவு பாகுபாட்டுடன் நடந்து கொள்வது தங்களுக்கு கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதயம், கிட்னி, கல்லீரல் மற்றும் கார்னியா ஆகியவைகள் தான் இப்படி கைதிகளிடம் இருந்து பெரும்பாலும் அகற்றப்படும் உறுப்புகளாகும் என்று தெரிவித்துள்ளனர்.
இத்தகைய நிகழ்வுகள் சுகாதார பணியாளர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்கமருந்து செலுத்துபவர்கள் மற்ற மருத்துவ நிபுணர்களை கொண்டு செயல்படுவதாக கூறினார். 2006, 2007 வாக்கிலிருந்து இது குறித்த தகவல்கள் வருவதாகவும், அந்த சமயத்தில் இருந்தே சீனா இது தொடர்பான திருப்திரமான விளக்கங்களை அளிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
ஜெனிவாவை சேர்ந்த சீன மிஷனின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இத்தகைய நிபுணர்கள் தவறான தகவல்களை அளித்து சீனாவின் மீது பழி போடுவதாகவும் இத்தகைய குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்து நிராகரிப்பதாகவும் தெரிவித்தார். சீனா, சட்டத்தின் கீழ் இருக்கும் ஒரு நாடு எனவும் மனித அங்கங்களை வர்த்தகம் செய்வதும் சட்டவிரோதமாக அங்கங்களை நீக்குவதும் சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட ஒன்றாகும் என்று தெரிவித்தார்.