இந்தியா மீது பாரபட்சம் காட்டும் மேற்கத்திய ஊடகங்கள்? என்ன சொல்கிறது IIMC சர்வே?
இந்தியாவின் கொரானா வைரஸ் தொற்று நோய்ப் பரவல் குறித்த மேற்கத்திய ஊடக செய்திகளின் தன்மை குறித்து இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) என்ற அமைப்பு சமீபத்தில் சர்வே ஒன்று நடத்தியது.
அதன் முடிவுகளில் மேற்கத்திய ஊடகங்களின் இந்தியா தொடர்பான கொரனா செய்திகள் பாரபட்சத்திற்கு உரியது என்று 82 சதவிகித ஊடகவியலாளர்கள் நம்புவதாக முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் 69 சதவீதம் பேர், இத்தகைய எதிர்மறையான செய்திகளால் இந்தியாவுடைய பெயர் சற்று சரிந்து விட்டதாகவும், 56% பேர், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் கருத்துக்களின் மீது இத்தகைய செய்திகள் செல்வாக்கு கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
IIMCயின் டைரக்டர் ஜெனரல் சஞ்சய் திவேதி இது குறித்து தெரிவிக்கையில், 2021 ஆம் ஆண்டு ஜூனில் நடத்தப்பட்ட இந்த சர்வேயில் இந்திய ஊடகவியலாளர்களிடமிருந்து (பத்திரிகையாளர்கள், செய்தி துறை நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள்) 529 பதில்களை பெற்றதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சர்வேயில் 64 சதவீதம் பேர் ஆண்கள் மற்றும் 36 சதவிகிதம் பேர் பெண்கள். இந்த சர்வேயில் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும் பிரசுரம், டிஜிட்டல் மற்றும் டிவி ஊடகங்களை சேர்ந்தவர்கள்.
இதில் 60% பேர், மேற்கத்திய ஊடகங்கள் இந்தியாவின் பெயரை கெடுப்பதற்காக வேண்டுமென்றே எதிர்மறையான செய்திகளை வெளியிட்டதாக நம்புகிறார்கள். 71% பேர் நடுநிலையான செய்திகள் வெளியிடப்படவில்லை என்று நம்புகிறார்கள். இந்த ஆய்வு இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரங்கள் மேலைநாடுகளில் எப்பொழுது ஆரம்பித்தது என்பதையும் அறிய முயற்சிக்கிறது. 38% பேர் இது இரண்டாவது கொரானா அலையின் பொழுது ஆரம்பித்ததாகவும், 25 சதவிகிதம் பேர் இது முதல் அலையிலேயே துவங்கி விட்டதாகவும் தெரிவித்து இருக்கிறார்கள்.