மே 2, 2011 அன்று பாகிஸ்தானை சேர்ந்த ஒரு IT பணியாளர் சோயப் அக்தர், இரவு 1:30 க்கு, ஹெலிகாப்டர் ஒன்று நள்ளிரவு ஒரு மணிக்கு அபோட்டாபாத்தில் வட்டமிடுகிறது. இது ஒரு அரிய நிகழ்வு என்று ஒரு ட்வீட் செய்தார்.
என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே அவர் கவனித்த அந்நிகழ்வு அமெரிக்க சீல் (SEAL) குழு 6, அபோத்தாபாத்தில் உள்ள ஒரு காம்பவுண்டில், உலகத்தில் அதிகம் தேடப்படும் குற்றவாளியான அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்படும் நிகழ்வாகும். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பின்லேடன் கொல்லப்பட்ட செய்தியை அன்று அதிகாரப்பூர்வமாக உலகத்திற்கு அறிவித்திருந்தார்.
அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது நடந்த செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னணியில் இருந்த முக்கிய குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வரும் அமெரிக்காவின் 10 வருட தேடல்களுக்கு பின்லேடனின் மரணம் முடிவு கட்டியது. பின்லேடனின் மரணம் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஒரு முக்கியமான மைல்கல் என்று விவாதிக்கப்பட்டாலும், அல்கொய்தா இன்னும் முழுதாக அழிக்கப்படவில்லை.
பின்லேடனுக்கு பிறகு அல்கொய்தாவின் தலைமையை அய்மான் அல் ஜெவாகிரி ஏற்றுக்கொண்டு சில காலத்திற்கு முன்பு இறந்து விட்டார் என பல வதந்திகள் பரவினாலும் அவர் அல்கொய்தாவை இன்னும் வழிநடத்தி வருகிறார் என்று அறியப்படுகிறார். கடந்த பத்து வருடங்களில் அல்குவைதா பெருமளவு தன் வலிமையை இழந்திருந்தாலும் அது இன்னும் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படவில்லை.
தன்னுடைய வளர்ச்சிக்காக உலகத்தில் இடம் தேடி, தன்னுடைய பாரம்பரிய (அமெரிக்காவை இஸ்லாமிய உலகத்திற்கு வெளியே தள்ளுவது) போன்ற நோக்கங்களை நிறைவேற்ற அரசியல் பிளவுகளை தேடிக்கொண்டிருக்கிறது. அல்கொய்தாவின் திறன்கள் குறைந்து இருக்கலாம் ஆனால் அதன் நோக்கம் அப்படியே உள்ளது. மேலைநாடுகளில் பெரிய அளவிலான தாக்குதல் நடத்தும் அளவிற்கு வலிமை இல்லை என்றாலும் சிறிய அளவில் தாக்குதல் நடத்தலாம்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் போன்றவைகளுடன் நிறைய செல்வாக்கை அல்கொய்தா இழந்திருந்தாலும், அது இன்னும் செயல்பாட்டில் தான் உள்ளது. தொடர்ந்து வேரூன்றிய மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பாக இருந்து நீண்ட காலம் நிலைத்திருக்கும் வாய்ப்புகளை பெறுகிறது.