கடந்த வாரத்தில் மே 21-ஆம் தேதி, நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பந்தாரி அந்நாட்டு பிரதமர் சர்மா ஓலியின் பரிந்துரையின் பேரில் பாராளுமன்றத்தை இரண்டாவது முறையாக கலைத்தார். ஆட்சி நிறைவடைய இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கும் நேரத்தில் வரும் நவம்பர் 12 மற்றும் 19-ஆம் தேதி இடைத்தேர்தல்கள் நடத்தப்பட இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இந்த முடிவு நேபாள அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 66A கீழ் எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஷர்மா ஒலி தன்னுடைய பெரும்பான்மை பலத்தை பாராளுமன்றத்தில் நிரூபிக்க தவறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் ஓலி தான் பாராளுமன்றத்தைக் கலைக்கப் பரிந்துரை செய்துள்ளார்.
தன்னுடைய கட்சிக்குள்ளேயே உள்ள பிரிவுகளும், எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்தை எளிதாக நடத்த ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதை காரணமாக ஓலி தெரிவித்திருக்கிறார்.
டிசம்பர் 20, 2020-ல் முதல்முறையாக நேபாள பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஆனால் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை திரும்பக் கொண்டு வந்தது. அப்போதும் பிரதமர் ஓலியின் பரிந்துரையின் பேரிலேயே ஆட்சி கலைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் மே 21-ஆம் தேதி பிரதமர் ஓலி தனக்கு 153 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்தார். அவருடைய கட்சியை சேர்ந்த 127 எம்பிக்களும், ஜனதா சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த 32 எம்பிக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக தெரிவித்திருந்தார்.
மற்றொருபுறம் நேபாள காங்கிரஸ் தலைவர் ஷேர் பஹதூர் தியூபா தனக்கு 149 எம்பிக்களின் ஆதரவு இருப்பதாக கூறி ஒரு லிஸ்ட் உடன் வந்தார். அதில் அவருடைய கட்சியை சேர்ந்த 61 MP க்களும், மாவோயிஸ்ட் சென்டர் என்ற கட்சியை சேர்ந்த 48 MP -க்களும், 13 ஜனதா சமாஜ்வாதி கட்சியின் உபேந்திர யாதவ் பிரிவினை சேர்ந்தவர்களும் அடக்கம்.