யாருக்கு அதிக திரைகள்? யாருக்கு கலெக்ஷன் அதிகம்? - 'துணிவு' or 'வாரிசு'
இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகைக்கு தமிழ் திரையுலகில் இரண்டு பெரிய படங்கள் மட்டுமே வெளியாகின்றன.
இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகைக்கு தமிழ் திரையுலகில் இரண்டு பெரிய படங்கள் மட்டுமே வெளியாகின்றன. ஒன்று அஜித் நடித்துள்ள 'துணிவு' மற்றொன்று விஜய் நடித்துள்ள 'வாரிசு'.
இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக நடிகர் அஜித் இணைந்துள்ள திரைப்படம் 'துணிவு' பேங்க் கொள்ளையை மையப்படுத்தி உருவாகும் ஆக்ஷன் கதையில் அஜித் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் உள்ளது.
இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில். தில் ராஜு தயாரிப்பில் முதன்முறையாக விஜய் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக நடித்துள்ள படம் 'வாரிசு'. தெலுங்கு சினிமா பாணியில் குடும்ப பின்னணியை கொண்ட இப்படம் விஜய் ரசிகர்களையும் குடும்ப ரசிகர்களையும் கவரும் எனவும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித், விஜய் படங்கள் நேரடியாக மோதுகின்றன. குறிப்பாக 2014 ஆம் ஆண்டு ஜில்லா, வீரம் ஆகிய இரண்டு படங்களும் நேரடியாக மோதியது. தற்பொழுது ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இரு படங்களின் நடிகர்களின் படங்கள் மார்க்கெட் வளர்ச்சி கிட்டத்தட்ட 10 மடங்காக உயர்ந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் தல-தளபதி ஆகிய இருவரின் படங்கள் மோதுவதால் துணிவா-வாரிசா என சமூக வலைதளம் முதல் திரையரங்குகள் வரை ரசிகர்கள் சளைக்காமல் மோதி வருகின்றனர்.
இந்த நிலையில் வாரிசு படத்தை விட துணிவு படத்திற்கு தான் தமிழ்நாட்டில் அதிக திரையரங்கங்கள் ஒதுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதற்கு காரணமாக கூறப்படுவது என்னவென்றால் முதல்வரின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் 'துணிவு' படத்தை வெளியிடுவதால் அவரது கட்டுப்பாட்டில் உள்ள அதிக திரையரங்குகளில் துணிவு படத்தை வெளியிட வேண்டும் என்ற எழுதப்படாத விதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.