நிலக்கரி உற்பத்தியில் சுயசார்புடன் திகழுமா இந்திய அரசு? - விரிவான பார்வை !
இந்தியாவில், நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு பதிலாக, உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க செய்வதையே நோக்கமாக கொண்டுள்ளது இந்திய அரசு. இந்த நோக்கம் ஆத்மநிர்பர் பாரத்' திட்டத்தின் ஒரு பகுதியாகவே அமைந்துள்ளது. இந்தியாவில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கம் "ஆத்மநிர்பர் பாரத் 'திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்னரே நிர்ணயக்கப்பட்டது.
நிலக்கரி உற்பத்தியை 2019-2020 ஆம் ஆண்டில் 1.5 பில்லியன் டன்னாக (பி.டி) அதிகரிக்கும் இலக்கை 2014 ஆம் ஆண்டில் நிர்ணயித்தது இந்திய அரசு. அதில், இந்திய நிலக்கரி நிறுவனம் ( CIL) மற்றும் அதன் துணை நிறுவனங்களிலிருந்து 1 பில்லியன் டன் நிலக்கரி கிடைக்கபெறுகிறது. 2019 ஆம் ஆண்டில் நிலக்கரி உற்பத்தியை 1.5 பில்லியன் டன்னாக உயர்த்துவதற்கான இலக்கு 2023-24 வரை என மாற்றியமைக்கப்பட்டது.
2020 டிசம்பரில், நிலக்கரி அமைச்சகம் 2023-24 இல் இந்திய நிலக்கரி நிறுவனத்திடமிருந்து 1 பில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி கிடைக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தியது.
நிலக்கரி அமைச்சகத்தின் அறிக்கையின் படி, நிலக்கரியின் தேவை கடந்த 2019 – 20 ஆம் ஆண்டில் 955.26 மில்லியன் டன்னாக இருந்த நிலக்கரியின் தேவை 2023-24 இல் 1.27 ஆக அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. மேலும் நம்முடைய உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பதன் மூலம் இந்தியா சுய சார்பு நாடாக திகழும்.
நிலக்கரி உற்பத்தியில் 1.5 பில்லியன் டன் இலக்கை நாம் அடைய வேண்டுமெனில், நிலக்கரியின் உள்நாட்டு உற்பத்தி ஆண்டுதோறும் சுமார் 7 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும். இது சாத்தியமற்ற இலக்கல்ல. நிச்சயமாக சாத்தியம். 2008 ஆண்டு முதல் 2010 ஆண்டு வரையில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி சராசரி விகிதத்தில் சுமார் 7 சதவீதம் வரை வளர்ந்தது.
2001-02 முதல் 2009-10 வரையிலான கடந்த பத்தாண்டுகளில் நிலக்கரி உற்பத்தி சராசரியாக 5 சதவீதத்திற்கும் மேல் வளர்ந்தது. 2019-20 ஆம் ஆண்டில் நிலக்கரி விநியோகத்தில் முதலீடுகள் இரண்டு மடங்கு அதிகரித்த போதிலும், 2010-11 முதல் 2019-20 வரையிலான ஆண்டுகளில் நிலக்கரி உற்பத்தி வளர்ச்சியில் 3 சதவீத தோய்வு ஏற்பட்டது. பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலையே இதற்கான முக்கிய காரணம். 2019-20 ஆம் ஆண்டில், இந்தியாவில் மூல நிலக்கரி உற்பத்தி 729.1 மெட்ரிக் டன் ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 0.05 சதவீதம் குறைவான வளர்ச்சி ஆகும்.