மறுபடியும் இந்து நாடாகுமா நேபாளம்? அதிகரித்து வரும் போராட்டங்களும், பெருகி வரும் ஆதரவும்.!

மறுபடியும் இந்து நாடாகுமா நேபாளம்? அதிகரித்து வரும் போராட்டங்களும், பெருகி வரும் ஆதரவும்.!

Update: 2021-01-28 06:45 GMT

நேபாள பிரதமர் சர்மா ஓலி திங்களன்று (ஜனவரி 25) புகழ் பெற்ற பசுபதிநாத் கோவில் சென்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிறப்பு பூஜைகள் வழங்கினார். இதன் மூலம் ஏற்கனவே கொந்தளிப்பான அரசியல் நெருக்கடியில் இருக்கும் நேபாளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான இந்துக்களை ஈர்க்கும் இந்தக் கோவிலுக்கு வருகை தந்த நேபாளத்தின் முதல் கம்யூனிஸ்ட் பிரதமர் ஓலி ஆவார்.

இவரது முன்னோடிகளான புஷ்ப கலாம் தஹால், மாதவ் குமார் நேபாளம், பாபுரம் பட்டரை, ஜலா நாத் கானல் மற்றும் மன்மோகன் ஆதிகாரி ஆகியோர் எந்த இந்து கோவிலுக்கும் சென்றதில்லை. 

அரசியலமைப்பு மன்னராட்சியை மீட்டெடுக்கவும், இந்து நாடாக நேபாளத்தை மறுபடி மாற்றக் கோரும் போராட்டக்காரர்களுடன் ஓலி  சேர்வாரா என இந்த நிகழ்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் (NCP) உள்ள தஹால் மற்றும் பிற தலைவர்களுடன் பிரச்சினை வரத் தொடங்கியதில் இருந்து ஓலி மன்னராட்சி ஆதரவாளர்களுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினார்.

நேபாளத்தில் தொடர்ந்து மன்னராட்சிக்கு ஆதரவான போராட்டங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. மன்னராட்சியை மறுபடி கொண்டு வந்து, நேபாளம் இந்து நாடாக மறுபடி மாற  அந்நாட்டின் அரசியலமைப்பில் திருத்தம் செய்யக் கோருகிறாரகள்.

ஓலியும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும், மன்னராட்சி மற்றும் இந்து சார்பு 'ராஸ்திரியா பிரஜாதந்திர கட்சியின்' (RPP) தலைவர்களை சந்தித்து வருகின்றனர். மேலும் பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்த ஓலியின் நடவடிக்கைக்கு RPPயின்  ஆதரவைப் பெற்றுள்ளனர்.

ஓலி எப்போதும் RPPயுடன்  நல்ல உறவைக் கொண்டிருந்தார். அக்டோபர் 2015 முதல் ஆகஸ்ட் 2016 வரை ஓலி முதலில் பிரதமராக இருந்த காலத்தில், RPP  தலைவர் கமல் தாப்பாவை தனது துணை பிரதமராகவும் வெளியுறவு அமைச்சராகவும் நியமித்திருந்தார்.

ஓலி சில காலமாக இந்துத்துவா ராகத்தை வாசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், ராம பிரான் நேபாளத்தில் பிறந்ததாகக் கூறி ஒரு சர்ச்சையைத் தூண்டினார். நேபாளத்தின் சிட்வான் மாகாணத்தில் அயோத்திபுரியில் ராம பிரானுக்கு ஒரு பெரிய கோயில் கட்டி அதை புனித யாத்திரை இடமாக வளர்ச்சி செய்யுமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

RPP தவிர, நேபாளத்தின் பிரதான எதிர்க்கட்சியான நேபாள காங்கிரசுக்குள் (NC) உள்ள செல்வாக்கு மிக்க பிரிவுகளும் நேபாளத்தின் ‘மதச்சார்பற்ற அரசு’ நிலையை மாற்றி இந்து நாடாக திரும்புவதற்கு ஆதரவாக உள்ளன.

நேபாளத்தை மீண்டும் ஒரு ‘இந்து ராஷ்டிரா’ ஆக்குவது குறித்து வாக்கெடுப்பு நடத்தக் கோரி NC  பொதுச் செயலாளர் சஷாங்க் கொய்ராலா கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு மூத்த NC  தலைவரான சேகர் கொய்ராலா 'தி காத்மாண்டு போஸ்ட்' பத்திரிகைக்கு கூறுகையில், “ஒரு இந்து மாநிலமாக நேபாளம் மாறுவது நடக்கலாம். இது ஓலியின் ஆட்சியின் போது அல்லது சிறிது காலம் கழித்து நிகழலாம்” என்று கூறினார். 

பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா, அரசியலமைப்பு மன்னராட்சி மற்றும் நேபாளத்தின் ‘இந்து ராஷ்டிரா’ அந்தஸ்தை மீட்டெடுக்கக் கோரினார். இவர் முன்னாள் நேபாள காங்கிரஸ் அமைச்சர் பிரகாஷ் கொய்ராலாவின் மகள் மற்றும் முன்னாள் பிரதமர் பிஷேஷ்வர் பிரசாத் கொய்ராலாவின் பேத்தி ஆவார்.

நேபாள உச்சநீதிமன்றத்தில் பாராளுமன்ற கலைப்பு வழக்கில் ஓலியின் சார்பாக வாதிடும் மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் அனைவரும் மன்னராட்சி மற்றும் இந்து ராஷ்டிரா சார்பானவர்கள் என்று நாட்டின் அரசியல் விமர்சகர்கள் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

நேபாளம் ‘மதச்சார்பற்ற குடியரசு’ என்பதிலிருந்து மாற வேண்டும் என்று பகிரங்கமாக கோரி வரும் சுஷில் பந்த், சுரேந்திர பண்டாரி, பால்கிருஷ்ணா நியூபேன் மற்றும் பிஷ்ணு பிரசாத் பட்டாராய் ஆகியோர் ஓலி சார்பாக வாதிடுகின்றனர்.

"ஓலி மன்னராட்சி மற்றும் இந்துத்துவ சக்திகளுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொள்கிறார் என்பதற்கு  இது மேலும் ஆதாரம்" என்று  மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஒருவர் கூறினார்.

ஓலி புதிய தேர்தல்களை விரும்புவதாகத் தெரிகிறது. இதனால் அவர் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற முடியும். நேபாள அரசியலமைப்பை திருத்துவதற்கு அத்தகைய பெரும்பான்மை தேவை. 

ஓலி 2018ல் தேசியவாதத்தை முன்னிறுத்தி  ஆட்சிக்கு வந்தார், இதன் காரணமாக  அவர் இந்தியாவுக்கு எதிராக பேச நேரிட்டது. நேபாளத்தில் கஷ்டங்களை ஏற்படுத்திய 2015 பொருளாதாரத் தடையின் போது ஓலி இந்தியாவுக்கு எதிராக திரும்பினார்.

தஹால் தலைமையிலான மாவோயிஸ்டுகள் கூட்டணி ஓலி அரசாங்கத்திற்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதையடுத்து, 2016ல்   தனது ஆட்சியை கவிழ்த்ததாக ஓலி இந்தியா மீது குற்றம் சாட்டினார்.

2018 ல் ஆட்சிக்கு வந்தபின், ஓலி சீனாவுக்கு ஆதரவான பாதையைத் தேர்ந்தெடுத்து,  இந்தியாவிலிருந்து நேபாளத்தை விலக்கிக் கொண்டார், அதே நேரத்தில் நாட்டில் சீனா தனது செல்வாக்கினை அங்கு அதிகரிக்க அனுமதித்தார்.

ஆனால் தஹால் தனது தலைமைக்கு எதிராக திரும்பியதால் ஏற்பட்ட நெருக்கடியில் சீனாவின் தலையீடு ஓலிக்கு பிடிக்கவில்லை. சீனா, ஓலி மற்றும் தஹால் இடையே நல்லுறவை ஆதரித்தது. நேபாளத்திற்கான சீனத் தூதர் ஹூ யான்கி, கட்சி ஒற்றுமையின் நலன்களுக்காக பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு ஓலிக்கு பரிந்துரைத்தார்.

கோபமடைந்த ஓலி நேபாளத்தின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துமாறு யான்கியிடம் கேட்டார். மறுபுறம் இந்தியாவோ, மிகவும் நியாயமான முறையில், தலைமை நெருக்கடியில் தலையிடவோ அல்லது ஒருவர் பக்கம் மட்டுமே ஆதரவோ அளிக்கவில்லை, இதனால் நம்முடன் உள்ள உறவுகள் குறித்து ஓலி மறுபரிசீலனை செய்து வருகிறார். 

ஆளும் பா.ஜ.க, தனது இந்துத்துவ ஆதரவு நிலைப்பாட்டில் மகிழ்ச்சியாக இருக்கும் என்று ஓலி நினைக்கிறார். சீனாவை பகைத்துக் கொண்ட பிறகு எல்லாரின் உதவியும் அவருக்கு கண்டிப்பாக தேவைப்படும். 

Translated From: Swarajya

Similar News