கத்தோலிக்க சர்ச் நடத்திய பள்ளிகளில் பூர்வகுடி குழந்தைகள் படுகொலை - மன்னிப்பு கேட்பாரா போப்?
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, வாடிகனில் வசிக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிசை மன்னிப்புக் கோரும் படி கேட்டிருந்தார். கனடாவைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூர்வகுடி குழந்தைகளின் இரண்டு பெரிய இடுகாடுகள் (mass graves) ஜூன் 2021ல் கண்டறியப்பட்டது. இந்த படுகொலைகளில் கத்தோலிக்க தேவாலயத்தின் பங்களிப்பிற்காக மன்னிப்பு கோரும் படி ட்ரூடோ கேட்டுக் கொண்டுள்ளார்.
கனடாவில், ஜூன் மாத ஆரம்பத்தில் மரிபெல் ரெசிடென்சியல் ஸ்கூல் எனும் பகுதியில் 751 சடல எச்சங்கள் (mortal remains) கொண்ட அடையாளமிடப்படாத இடுகாடு கண்டறியப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு, பிரிட்டிஷ் கொலம்பியாவில் 215 எச்சங்கள் கொண்ட இடுகாடு இதற்கு முன்னால் தங்கும் பள்ளியாக இருந்த இடத்தில் கண்டறியப்பட்டது.
இந்த இரண்டு பள்ளிகளும் கனடிய பூர்வகுடி (indigenous) குழந்தைகளை அவர்கள் குடும்பத்திடமிருந்து பிரித்துப் படிக்க வைக்கும் தங்கும் பள்ளிகள் ஆகும். கிட்டத்தட்ட 113 வருடங்கள் இத்தகைய பள்ளிகள் இயங்கின. தங்களுடைய சொந்த மொழியை கூட இந்த பள்ளிகளில் பேசுவதற்கு அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய மிகப்பெரும் இடுகாடுகள் (mass graves) பூர்வகுடி சமூகத்தின் உறுப்பினர்களால் தரையை ஊடுருவும் ரேடாரால் கண்டறியப்பட்டது. இத்தகைய சடல எச்சங்களைக் கண்டறியும் இந்த பணி சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் தொடங்கப்பட்டது.
கத்தோலிக்க சர்ச்களால் இத்தகைய தங்கும் பள்ளிகள் 1890-ல் தொடங்கி 1970-கள் வரை இயங்கியது. இது ஒரு காலத்தில் கனடாவின் மிகப்பெரிய பள்ளியாக 500 மாணவர்கள் வரை கொண்டிருந்தது. 215 சடல எச்சங்களில், 3 வயது குழந்தையின் சடல எச்சமும் இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அனைத்து குழந்தைகளும் பல ஆண்டுகளுக்கு முன்னால் புதைக்கப்பட்டனர். இன்னும் ரேடார் மூலம் கண்டறியும் பணி தொடர்ந்தால் மேலும் சடலங்களின் எச்சங்கள் கண்டறியப்படும் என்று பூர்வகுடி சமூகத்தினர் எதிர்பார்க்கின்றனர்.