தமிழகத்தின் முக்கியமான சிவாலயங்களில் முதன்மையானது சென்னை மயிலையில் இருக்கும் கபாலீஸ்வரர் ஆலயம். இங்கு குடிகொண்டிருக்கும் பார்வதி தேவி கற்பகாம்பாளாக அருள் பாலிக்கிறார். திராவிட கட்டிடக்கலையில் தக்க உதாரணமாக திகழும் இந்த கோவில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. புராணங்களின் படி பார்வதி தேவி சிவபெருமானை மயில் வடிவில் வணங்கியதாகவும். மயில் போன்ற ரூபமே பின்னாளில் மருவி மயிலை என்றும் ஆங்கிலத்தில் மயிலாப்பூர் என்றும் பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது.
நாயன்மார்களால் பாடப்பெற்ற ஸ்தலமாகவும் இந்த இடம் விளங்குகிறது. இந்த கோவில் வளாகத்தினுள் ஏராளமான சந்நிதிகள் உண்டு. ஏராளமான மண்டபங்களும் உண்டு. ஒரு நாளில் ஆறு முறை சிவபெருமானுக்கு பூஜைகள் நிகழ்கின்றன. இந்த கோவிலில் பங்குனி மாதத்தில் நிகழும் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியான அறுபத்தி மூவர் திருவிழா மிகவும் புகழ்பெற்ற நிகழ்வாகும்.
இந்த தலத்தின் வரலாறு ஒன்றல்ல இரண்டல்ல ஏராளம் உண்டு. பிரம்மர் செய்த தவறுக்காக அவருடைய ஒரு தலையை கொய்தார் சிவபெருமான். கபாலம் என்பது தலையையும் ஈஸ்வரன் என்பது சிவபெருமானை குறிப்பதால் இங்கிருக்கும் இறைவன் கபாலீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். தான் செய்த தவறின் பரிகாரமாக பிரம்மர் இந்த இடத்தில் லிங்கத்தை அமைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த இடத்திற்கு புராணங்களில் பல பெயர்கள் உண்டு சுக்ரபுரி, வேதபுரி என்றும் "கயிலையே மயிலை மற்றும் மயிலையே கயிலை "என்ற கூற்றும் உண்டு. கயிலாயத்தில் இறைவனை வணங்குவதற்கு ஒப்பானது இங்கே இறைவனை வழிபடுவது. முருகனுக்கு உமையாள் வேல் கொடுத்த இடம் இது என்கிற குறிப்பும் உண்டு. போரில் ராவணனை வெல்லும் முன் ஶ்ரீ ராமர், இறைவனை இங்கே தரிசித்துள்ளார். சிவனேச செட்டியாரின் மகளை நாகம் தீண்டிய போது திருஞான சம்பந்தரின் பதிகத்தில் அப்பெண் உயிர்பெற்றதும் இத்தலத்தில் தான். அருணகிரி நாதர் கற்பகாம்பாளின் கருணையையும், சிங்கார வேலரையும் போற்றி துதித்துள்ளார்.
இந்த மயிலையில் தான் திருக்குறள் வழங்கிய அரும் ஞானி திருவள்ளுவர் அவதரித்தார் என்பது கூடுதல் சிறப்பு. அம்பிகை மயில் ரூபம் எடுத்து வணங்கியதன் பிரதிபலிப்பாய் இந்த கோவிலினுள் மயில்களின் திருவுருவும் உண்டு. பார்வதி தேவி புன்னை மரத்தடியில் இருந்து இங்குள்ள சிவபெருமானை வணங்கியதால் புன்னை மரமே இக்கோவிலின் ஸ்தல விருட்சமாக உள்ளது.