மகிழ்ச்சியான வாழ்விற்கு இறைவனுக்கு அர்பணிக்க வேண்டிய மலர்கள் இவை!

Update: 2022-01-09 00:30 GMT

நாம் செலவிடும் நேரங்களிலேயே பூஜைக்கான நேரம் மற்றும் தியானத்திற்கான நேரம் தான் வாழ்வின் உன்னத தருணங்களுள் ஒன்று எனலாம். பொருள் தன்மையிலான வாழ்வில் இருந்து சிறிய இடைவெளியாக இந்த பூஜை நேரங்கள் அமையும். அந்த பூஜையை முறைப்படி ஒருவர் செய்கிற போது எல்லா வல்ல அருளையும் அவர் பெறுவார் என்பது முன்னோர்கள் மற்றும் ஆன்மீக பெரியோர்களின் கூற்றாகும். அதில் முக்கியமான அம்சம் மலர்கள். உண்மையான பக்தியுடன் ஒருவர் எதை அர்பணித்தாலும் இறைவன் ஏற்று கொள்வார்.

இதற்கு கண்ணப்ப நாயனர் தொடங்கி நம் புராணங்களில் ஏராளமான உதாரணங்கள் உண்டு. அதே வேளையில் முறைப்படி செய்யக்கூடியவைகளுக்கும் பிரத்யேக பலன்கள் இருப்பதையும் யாரும் மறுப்பதிற்கில்லை. அந்த வகையில் எந்த கடவுளுக்கு எந்த மலர்கள் உகந்தது என நம் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அது அந்த இறையின் பக்தியுடன் கலப்பதற்கு நமக்கு எளிதாக அமையும் என்ற அடிப்படையில் வகுக்கப்பட்டதாகும்.

பக்தியுடன் அர்பணிக்கும் மலர்களில் முக்கியமானது மல்லிகை. அனுமனுக்கு உகந்ததாக சொல்லப்படும் இம்மலரை அவருக்கு அர்பணித்து வணங்கி வருவது நல்ல பலனை கொடுக்கும். தாமரை மலர் இலட்சுமி தேவியின் அம்சம் என்றே சொல்வர். இலட்சுமி தேவி தாமரையில் இருந்து அவதரித்தவர் என்ற புராண கதைகளும் உண்டு.

அதனாலேயே இலட்சுமிக்கு பத்மாவதி என்ற பெயரும். பத்மாவதியை நெஞ்சில் ஏந்தியிருப்பதால் விஷ்ணு பெருமானுக்கு பத்மநாபன் என்ற பெயரும் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இலட்சுமி தேவியின் அருளை பெறவும், இலட்சுமி பூஜையின் போதும் தாமரையை அர்பணிப்பது நல்ல பலன்களை கொடுக்கும்.

சிவப்பு செம்பருத்தி காளியின் அம்சம் என்பர். வட இந்தியாவில் செம்பருத்தியின் வடிவம் காளியின் திருநாவை குறிப்பதாகவும். அந்த அடர் சிவப்பு நிறம் காளியின் தீவிரத்தன்மையை குறிப்பதாகவும் நம்பப்படுகிறது. அதனாலேயே காளிக்கு சிவப்பு நிற மலர்கள் குறிப்பாக சிவப்பு செம்பருத்தி மிகவும் உகந்ததாகும்.

பாற்கடலை கடைந்த போது கிடைத்த பொக்கிஷங்களில் ஒன்று பாரிஜாதம். அதன் தெய்வீக நறுமணத்திற்காகவே அதனை சொர்கத்திற்கு கொண்டு வந்தார் இந்திரன். இந்த தெய்வீக மணம் கமழும் பாரிஜாதத்தை மகா விஷ்ணுவிற்கு அர்பணித்து வணங்கி வர அவரது நல்லருளை பெறலாம் என்பது நம்பிக்கை.



Similar News