சம்பந்தருக்கு சிவபெருமான் அருசுவை விருந்தளித்த அதிசய திருத்தலம்!
உச்சிநாதர் ஆலயம், கடலூர்
சிவபுரி உச்சிநாதர் கோவில் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் சிவபுரி என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் சிவபெருமானுக்கு உச்சிநாதர் என்றும் அம்பாளுக்கு உச்சி நாயகி அல்லது கனகாம்பிகை என்பது திருப்பெயர். இந்த கோவில் தேவாரம் பாடப்பெற்ற தலங்களுள் ஒன்றாகும். குறிப்பாக சொன்னால், காவேரி வடக்கரை தலங்களில் இந்த கோவில் மூன்றாவதாக அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகம் 1 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதனுள் பல்வேறு தெய்வ சந்நிதிகள் அமைந்திருப்பது இக்கோவிலின் சிறப்பு.
நம் புராணங்களின் படி அகத்தியருக்கு சிவனும் பார்வதியும் தரிசனம் கொடுத்த தலம் இது. சிவபெருமான் மூலவராக அருள் பாலிப்பதற்கு பின்புறம் சிவனும் பார்வதியும் திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர். இக்கோவில் ஒரு காலத்தில் சிதம்பர பிரதேசத்திற்கு உட்பட்டதாக இருந்தது. அப்போது இந்த பகுதி முழுமையும் நெல்லால் சூழப்பட்டிருந்தது. எனவே இந்த பகுதிக்கு திருநெல்வாயில் என்ற பெயர் உண்டு. மேலும் திருஞான சம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருந்த போது தினசரி இந்த கோவிலுக்கு வருவார் என்பது புராண குறிப்பு.
திருஞானசம்பந்தருக்கு சீர்காழியில் உள்ள சட்டை நாதர் திருக்கோவிலில் பார்வதி அம்மை தெய்வ பால் ஊட்டினார். அப்போது சம்பந்தர் பெருமான் அம்மே, அப்பா என அழைத்து "தோடுடைய செவியன் " என்ற பதிகத்தை பாடினார். அவருக்கு 12 வயதாக இருந்த போது 63 அடியார்கள் புடை சூழ அவர் இந்த திருநெல்வாயில் நோக்கி வந்த போது, உச்சி காலம் அதாவது மத்தியானம் நெருங்கிவிட்டது. மிகுந்த பசியில் இருந்த சம்பந்தருக்கும் மற்ற அடியவர்களுக்கு இறைவனே கோவில் பணியாளர் ரூபத்தில் வந்து சுவை மிகுந்த உணவை வழங்கினார். உச்சி பொழுதில் வந்து உணவளித்ததால் இங்கிருக்கும் இறைவனுக்கு உச்சிநாதர் அல்லது மத்தியானீஸ்வரர் என்று பெயர்.
தெய்வ குழந்தையாம் ஞான சம்பந்தருக்கு உணவு வழங்கிய இடம் என்பதால், இன்றும் பல குழந்தைகளுக்கு முதல் அன்ன பிரச்சன்னத்தை இக்கோவிலில் செய்வதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர். இவ்வாறு செய்தால் குழந்தையின் வாழ்வில் உணவிற்கு எந்த குறையும் வராது என்பது ஐதீகம்.
இக்கோவிலின் வைகாசி விசாகம் திருவிழா பெரு விமர்சையாக கொண்டாடப்படும் ஒன்று.