நம் மரபில் நல்ல நிகழ்வுகளில் கலசம் வைத்து வழிபடுவது ஏன்?

Update: 2022-01-31 02:35 GMT

நம் மரபில் நல்ல நிகழ்வுகள் நடக்கும் போதும், பூஜை போன்ற புனிதமான காரியங்களின் போதும் கலசம் வைப்பது மரபு. திருமண சடங்குகளில் கலச கும்பமே முதலில் செல்லும் மணமகனும், மணமகளும் பின் செல்வார்கள். வீடு கிரஹபிரவேசம் என எல்லா சடங்களிலும் முதன்மையாக இருப்பது கலச கும்பம் தான். பூஜைகள் செய்யும் போது யாகங்கள், ஹோமங்கள் நடத்தும் போது அங்கே முதன்மையாக இருப்பது கலசம். ஆன்மீக பெரியோர் அல்லது முக்கியமானவர்களுக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பதை நாம் பார்த்திருப்போம்.

எனில் இந்த பூரண கும்பம் அல்லது கலசம் என்பது என்ன? கலசம் என்பது பித்தளை அல்லது செம்பால் ஆன சிறு பானை போன்றது. அந்த கலசம் அரிசி அல்லது நீரால் நிறைந்திருக்கும். கலசத்தை சுற்றி மாவிலை மற்றும் மலர்கள் அலங்கரிக்கப்பட்டு கலசத்தின் மீது தேங்காய் வைக்கப்பட்டிருக்கும். கலச ஜோடனை என்பது நிகழ்வுக்கு தகுந்தார் போல மாறும். ஆனால் அதில் அடிப்படையாக அரிசி, நீர், மாவிலை, நாணயங்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கும். அடிப்படையில் இது அபரிமீதத்தை குறிக்கிறது. நிறைவான ஒரு மங்கள பொருள். ஒருவரின் வாழ்வும் அனைத்து நல்லவையும் நிறைந்து பரிபூரணமாக இருக்க வேண்டும் என்பதன் அடையாளமே இந்த பூரண கும்பம்.

அடிப்படையில் கலசத்திற்கு புனித நீரை இட்டு நிரப்புவது வழக்கம். இது வேதங்களின் அறிவை கொண்டுள்ளது என்று பொருள். கலசத்தை பூஜையில் இருத்தி பிரதிஷ்டை செய்கிற போது நாம் விரும்பி அழைக்கும் தேவர்கள், தெய்வங்கள் அந்த கலசத்தில் வந்து அமர்வதாக பொருள். அதனால் தான் பூஜை, யாகம் அல்லது ஹோமத்தின் முடிவில் கலசத்தில் இருக்கும் நீரை எடுத்து வீடுகள் தோறும் தெளிக்கிறோம். தெய்வங்கள் நிறைந்த அந்த நீரை வீடுகள் தோறும் தெளிக்கிறோம் என்று பொருள்.


Similar News