பஞ்சகண்ண சேத்திரத்தை நினைத்தாலே முக்தி! ஆச்சர்யமூட்டும் லோகநாதபெருமாள்

திரு லோகநாத பெருமாள் கோவில், திருக்கண்ணங்குடி

Update: 2022-02-18 00:45 GMT

தமிழகம் நாகப்பட்டிணம் அருகில் சிக்கலிலிருந்து 2 கி.மீ தொலைவில் திருக்கண்ணங்குடி எனும் ஊரில் அமைந்துள்ளது லோகநாத பெருமாள் கோவில். திருவாரூரிலிருந்து நாகப்பட்டிணம் செல்லும் நெடுஞ்சாலையில் இக்கோவில் அமையப்பெற்றுள்ளது. திரவிட கட்டிடக்கலைக்கு சான்றாக திகழும் இக்கோவில் திவ்ய பிரபந்தத்தில் போற்றப்பட்டு ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட கோவிலாகும். அதுமட்டுமின்றி 108 திவ்யதேசங்களுள் ஒன்றாக இக்கோவில் திகழ்கிறது.

இங்கு குடி கொண்டிருக்கும் பெருமாளுக்கு லோக நாதர் என்றும் இலட்சுமி தேவிக்கு லோகநாயகி என்பதும் திருப்பெயர்களாகும். சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவில் பிற்காலத்தில் விஜயநகர மன்னர்கள் மற்றும் மதுரை நாயக்கர்களால் புணரமைக்கப்பட்டது என்று வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன. பிரம்ம தேவர், பிருகு முனிவர், கெளதமர், வஷிஸ்டர் போன்ற பெரும் ஞானிகளுக்கு பெருமாள் இங்கே தரிசனம் கொடுத்துள்ளார்.

இக்கோவில் குறித்து சொல்லப்படும் வரலாறு யாதெனில், கண்ணன் மீது தீரா பக்தி கொண்ட வசிஸ்டர் ஒரு முறை வெண்ணையால் ஆன கண்ணனை வைத்து கடும் வழிபாடுகள் செய்து வந்தார். பக்தியின் தீவிரத்தால் அந்த வெண்ணை உருகி விடாதவாறு கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டார். இவரின் பக்தியுடன் விளையாட எண்ணிய கண்ணன், சிறு குழந்தையின் வடிவில் கோபாலானாக தோன்றி அந்த வெண்ணை கண்ணன் திருவுருவை முழுவதுமாக தின்று விழுங்கிவிட்டார். இதை கண்டு சினமுற்ற வஷிஸ்டர், வந்திருப்பது கண்ணன் என்றறியாமல் அக்குழந்தையை விரட்டி சென்றார். அக்குழந்தை கிருஷ்ணாரண்யம் எனும் இடத்தை நோக்கி ஓடியது. அங்கே பல ரிஷிகள் தவம் செய்து கொண்டிருந்தனர். தங்களின் ஞான திருஷ்டியால் வந்திருப்பது கண்ணன் என்றறிந்து கண்ணனை பாசக்கயிற்றால் கட்டினர். கண்ண பெருமான் ரிஷிகளை நோக்கி, வசிஸ்டர் என்னை தேடி வருகிறார் அவரிடம் நீங்கள் வேண்டும் வரம் பெற்று கொள்ளுங்கள் என்றார். ரிஷிகளோ கண்ணா, எங்களுக்கு தரிசனம் நல்கியதை போல இங்கு உனை காண வரும் அனைவருக்கும் தரிசனம் நல்குவாயாக என வேண்டினர். வசிஸ்டரும் அங்கே வந்து கண்ணனின் கண்கொள்ளா தரிசனம் கண்டு மகிழ்ந்தார். அன்பால் கட்டுண்டு கண்ணன் நின்றதாலே இது திருக்கண்ணங்குடி என்றானது.

வடஇந்தியாவில் ஐந்து முக்கிய கிருஷ்ணாலயங்களை பஞ்ச துவாரக்கா என்றழைப்பதை போல தமிழகத்தில் முக்கியமான ஐந்து கிருஷ்ண ஸ்தலங்களை பஞ்ச கண்ண சேத்திரம் என்றழைக்கின்றனர். திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணக்குடி என சோழநாட்டில் நான்கு ஸ்தலங்களும், நடுநாட்டில் ஒரு ஸ்தலமும் அமைந்துள்ளது. இந்த கோவில்களை நினைத்தாலே சகல பாவமும் தீரும் என்பது நம்பிக்கை

Tags:    

Similar News