பாவங்கள் அனைத்தும் பனிப்போல் விலக ஆச்சர்யமூட்டும் அமர்நாத் ஆலயம்!

Update: 2022-03-20 02:31 GMT

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள இந்துக்களுக்கு மிகவும் புகழ்பெற்ற யாத்ரீக தலங்களில் ஒன்று அமர்நாத் குகை. மிக நீண்ட காலமாக பழங்காலம் தொட்டே இந்த குகை இங்கிருப்பதை பல வரலாற்று நிகழ்வுகள் புராணக்குறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன. அமர்நாத் குகை 3,888 மீட்டர் (12,756 அடி) உயரத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீநகரிலிருந்து குகைக்கு செல்லும் பாதை பஹல்காம் நகரம் வழியாக 141 கி.மீ ஆக உள்ளது.

அமர்நாத் என்ற பெயர் இரு வேறு விஷயங்களை குறிக்கிறது. அமர் என்பது அழியாத தன்மை உடையது என்றும் நாத் என்பது நாதன் என்கிற இறைவனை குறிப்பதாக உள்ளது. இந்த குகையில் தான் இறைவன் அழியாத மற்றும் படைப்பின் ரகசியங்களை அன்னை பார்வதியிடம் வெளிப்படுத்தியதாக புராண பின்னணியில் கூறப்பட்டுள்ளது.

வரலாற்றில் நீண்ட காலமாக, இந்த குகை பெரும்பாலும் பனியால் சூழப்பட்ட ஒரு இடமாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மே முதல் ஆகஸ்ட் வரையிலான கோடை மாதங்களில், குகைக்கு மேலே உள்ள இமயமலையின் பனி உருகி, குகைக் கூரையின் மேலே இருந்து வெளியேறும் நீர் சிவ லிங்கத்தின் உருவத்தை உருவாக்குவது அதிசயமாகும்.

இந்த குகையின் புராணக்கதை பலவாறாக சொல்லப்படுகிறது. அதாவது, இந்த இடத்தை சிவபெருமான் தேர்வு செய்ததற்கான காரணம் அமர கதை எனப்படும் படைப்பு மற்றும் படைப்பு சார்ந்த ரகசியங்களை அன்னை பார்வதிக்கு தேவ ரகசியமாக உரைக்க எந்த உயிர்களின் இருப்புமற்ற தனிமையான இடத்தை அவர் விரும்பியதாகவும் அதனாலேயே இந்த இடத்தை தேர்வு செய்தார் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனாலும் அங்கேயிருக்கும் சிவபெருமானின் மான் தோலின் அருகில் ஒரு புறாவின் முட்டை இருந்தென்றும் அந்த முட்டை தன் அடுத்த பரிமாணத்தை அடைகையில் இரு புறாக்களாக உருவாகி அழியாத்தன்ன்மையை அடைந்து இன்றும் யாத்ரீகர்களுக்கு காட்சி தருவதாக நம்பப்படுகிறது .

மேலும் ஒரு காலத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுக்க முழுக்க நீரில் மூழ்கியதாக ஒரு காவியக் கதை குறிப்பிடுகிறது. முனிவர் காஷ்யப் இந்த சூழலில் இருந்து அந்த இடத்தை மீட்க பல ஆறுகள் மற்றும் நதிகளை உருவாக்கினார் எனவும் சொல்லப்படுகிறது.

பிரிகு ரிஷி இந்த நிலப்பரப்பு வழியாக இமயமலைக்குச் சென்று கொண்டிருந்தபோது அமர்நாத் குகையை புனித லிங்கத்துடன் கண்டுள்ளார். அதன் பின் இதனை உலகிற்கு வெளிப்படுத்தினார். அதன் பின் இன்று வரை பல மில்லியன் கணக்கான யாத்ரீகள் இங்கே வந்த வண்ணம் உள்ளனர்.

Similar News