இறந்தவர்களின் படங்களை வீட்டில் எங்கு வைத்து வழிபட வேண்டும்? எங்கு வைக்ககூடாது?

Update: 2022-04-13 02:14 GMT

உடல் ரீதியான நினைவுகளை மட்டும் தான் ஒரு மரணம் எடுத்து செல்லும். அன்புக்குரியவர்களின் பிரிவானது உணர்வு ரீதியான நினைவுகளை நம்மிடத்திலே விட்டு செல்லும். அந்த நினைவுகளை, நினைவுகள் தாங்கியிருக்கும் பொருட்களை வைத்துகொள்பவர்களும் உண்டு.

குறிப்பாக, இறந்தவர்களின் படங்களை வீடுகளில் ஏதோவொரு அறையில் அல்லது சுவற்றில் வைத்து வழிபடுவது வழக்கம். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று மிக அழகாக பிரேம் செய்து படத்தை பூஜை அறையில் வைத்து விடுவர். இவையெல்லாம் அவர்களின் மீது வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு.

இறந்தவர்களின் படங்களை வைப்பதென்பது ஒரு கலாச்சாரம். பல வீடுகளில் மூதாதையரின் முகங்களை சமீபத்திய தலைமுறையினர் சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் படங்களை வைத்தே கண்டு வருகின்றனர். அந்த வகையில் படத்தினை வீடுகளில் வைத்து வழிபடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால் இந்த படங்களை இறைவனை வழிபடும் வழிபாட்டு கூடத்தில் அல்லது பூஜை அறையில் வைக்கலாமா என்பது தான் கேள்வி.

நம்பிக்கை ரீதியாக பார்த்தால், இறந்தவர்கள் வீட்டின் அமைதியையும் நல்வாழ்வையும் பாதுகாக்கும் பாதுகாவலர்களாக நம் கலாச்சாரத்தில் பார்க்கப்படுகிறார்கள். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி கடவுள்களுடன் இறந்தவர்களின் படங்களை வைப்பது சரியான ஒப்பீடு அல்ல.

காரணம், இறந்தவர்களின் ஆன்மாவானது மற்றொரு சரீரம் எடுத்திருக்கும். நம்மை விட்டு பிரிவது ஸ்தூல உடல் மட்டுமே. எனவே அந்த ஸ்தூல உடலின் பிம்பத்தை கடவுள்களுக்கு இணையான ஆசனத்தில் வைத்து வழிபடுவதை வாஸ்து சாஸ்திரம் பரிந்துரைப்பதில்லை.

மேலும் கடவுள் என்பது பிறப்பு இறப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்தும் முக்கிய காரணியாக இருக்கிறார். அவ்வாறு இருக்கும் பரம்பொருளுக்கு இணையாக இறந்தவர்களின் படத்தினை வைக்க வேண்டாம் என சொல்லப்படுகிறது.

ஆனால் வழிபாட்டு தளத்தில் இருந்து பார்த்தால் இறந்த நம் முன்னோர்களும் வழிபடப்பட பட வேண்டியவர்களே. அதற்காக தான் அவர்களின் இறந்த தினம், முக்கிய அமாவாசை ஆகிய நாட்களில் முன்னோர்களுக்கு செலுத்த வேண்டிய கடமைகளை முழுமையாக செய்ய அறிவுருத்தப்படுகிறோம்.

குலதெய்வ வழிபாடுக்கு இணையாக முன்னோர்களின் வழிபாடு வைத்து போற்றப்படுகிறது. ஆனால் பூஜையறையில் வைப்பதை தவிர்க்கலாம் என்பது சாஸ்திரத்தின் படி ஒரு அறிவுரை மட்டுமே. நம்பிக்கையும், விருப்பமும் அவரவர் மனநிலை சார்ந்ததே

நன்றி : ஸ்பீக்கிங் ட்ரீ

Similar News