நாடும் வீடும் சுபிக்‌ஷமாக இருக்க வைக்க வேண்டிய ஐந்து பொருட்கள்!

Update: 2022-05-03 02:36 GMT

வெற்றி பெற்று சகோதரர்களுடனும் , மாதா குந்தியுடனும் மற்றும் மனைவி திரெளபதியுடனும் நாடு திரும்பிய யுதிர்ஷ்டருக்கு ஹஸ்தினாப்புரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

யுதிர்ஷ்டருக்கு ராஜ்யாபிஷேகம் செய்யப்படுவதற்கு முன்பாக அவருக்கு பகவான் ஶ்ரீ கிருஷ்ணரால் பல முக்கிய அறிவுரைகள் வழங்கபட்டன. இனி வரவிருக்கும் சுபிக்‌ஷமானதாக அமையவும், ஹஸ்தினாபுரத்தின் வருங்கால நலத்திற்கும் ஏற்றதான அறிவுரைகளையும் ஶ்ரீ கிருஷ்ணர் யுதிர்ஷ்டருக்கு போதித்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரு நாடு வளமுடையதாக இருப்பதற்கு ஒரு நாட்டில் மிக முக்கியமாக இருக்க வேண்டிய ஐந்து விஷயங்கள் என்ன? என்பதை போதித்தார். அதுமட்டுமின்றி இந்த ஐந்து விஷயங்களும் ஒருவர் வீட்டில் இருக்குமெனில் அது அந்த வீட்டில் இருக்கும் தீயவற்றை விலக்கி நல்ல அதிர்வுகளை அதிகரிக்குமாம். அது மட்டுமின்றி இந்த ஐந்து விஷயங்கள் இருக்கும் இடத்தில் வெளிப்புற சூழலும் சரி, உட்புற மனநிலையும் மிக அமைதியானதாக, வளமிக்கதாக அமையும். அந்த ஐந்து விஷயங்கள் யாதெனில்,

குடிநீர்.

இந்து மரபில் நீர் என்பது அதீத முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதனால் தான் சூரியனை வணங்குவது தொடங்கி இறைவனுக்கு அர்பணிக்கும் அனைத்து அம்சங்களை நீர் கொண்டு சமர்பிக்கிறோம். எல்ல்லாவற்றிற்க்கு மேலாக வீட்டிற்கு வரும் உறவினர்கள் மட்டுமின்றி முகம் தெரியாத யாராக இருந்தாலும் சரி அவர்களுக்கும் தண்ணீர் வழங்க சொல்வது இதனால் தான். எனவே வீட்டினில் செல்வமும், வளமும் பெருக தண்ணீர் எப்போதும் குறையது இருப்பதும் வழங்குவதும் அவசியம்.

சந்தனம்

மிகவும் பிரபலமான ஒரு வாக்கியம் உண்டு சந்தன மரத்தை எத்தனை முறை பாம்பு தீண்டினாலும், அதனுடைய நஞ்சு எத்தனை தீவிரமானதாக இருந்தாலும், சந்தன மரம் அதனுடைய நறுமணத்தை ஒரு போதும் இழப்பதில்லை. எத்தனை தீமையிருந்தாலும் தன்னுடிய நல்ல தன்மையை இழக்காத சந்தனத்தை வீட்டில் வைப்பது மிகவும் உகந்ததாகும்.

நெய்

இந்து மரபில் மிக புனிதத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் பசுவிடமிருந்து கிடைக்கப்பெரும் பொருட்களில் ஒன்று. அதன் தூய்மை குணத்திற்காகாவே அதில் இலட்சுமி வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. அதனாலேயே நெய்யினால் ஏற்றப்படும் தீபமும் மிகவும் அற்புத பலன்களை கொடுக்கும் என பெரியோர் சொல்கின்றனர். எனவே வீடுகளில் நெய் இருப்பது நன்மை தரும்.

தேன்

தேன் என்பது தூய்மையின் அடையாளம். தேன் நம் உடலை மட்டுமின்றி ஆன்மாவின் ஆராவையும் சுத்திகரிக்கும் தன்மை கொண்டது எனவே செளபாக்கியம் நிறைந்த வாழ்விற்கு தேனை வீட்டில் வைத்திருப்பது நல்லது.

வீணை அல்லது இசைக்கருவி

இசைக்கருவி என்பது சரஸ்வதியின் அம்சம். எனவே கல்வி, ஞானம் போன்றவற்றில் சிறந்து விளங்க ஞானத்திற்கான அதிர்வுகள் வீட்டில் நிறைந்திருக்க ஒரு இசைக்கருவி இருப்பது மிகவும் நல்லது. 

Similar News