இன்றும் சூரியனே நேரில் வந்து பூஜைகள் செய்யும் ஆச்சர்ய புஷ்பரதேஸ்வரர் ஆலயம்
தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் ஞாயிறு கிராமம் என்று ஆச்சர்ய இடம் ஒன்று உள்ளது. இங்கு அமைந்திருக்கும் புஷ்பரதேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற சிவன் தலம் ஆகும். இங்கிருக்கும் அம்பிகைக்கு சொர்ணாம்பிகை என்பது திருப்பெயர். சுந்தரரின் மனைவி சங்கிலி நாச்சியார் பிறந்த ஸ்தலம் இது. எனவே அவருக்கென்று தனி சந்நிதியும், அமாவாசை மாசி மகம், போன்ற நாட்களில் அவருக்கு விஷேச ஆராதனையும் இங்கே நிகழ்வது தனிச்சிறப்பு.
இந்த கோவில் குறித்து பல்வேறு புராணக்கதைகள் சொல்லப்படுவதுண்டு. ஒரு முறை சோழ மன்னன் ஒருவன் ஆந்திரபிரதேசத்தின் போர் முடித்து திரும்புகையில், சோழவரத்தில் முகாமிட்டிருந்தார். அவர் சிவபெருமானின் அதிதீவிர பக்தர், சிவ பூஜை செய்வதற்காக தாமரை மலர் தேடி அலைந்து கொண்டிருந்தார். அவருடைய தேடலின் முடிவாக ஒரு குளம் நிறைந்த தாமரை மலர்களை அவர் கண்டார். அதிலும் குறிப்பாக ஒரு தாமரை மலர் மிகவும் உயரமாக, அழகாக கண்ணை கவரும் வகையில் ஒளி வீசிக்கொண்டிருந்தது. மற்றவைகளில் இருந்து அவை மாறுபட்டிருந்தது. அவருக்கு அந்த மலரை கொண்டு இறைவனுக்கு பூஜை செய்ய வேண்டும் என்ற விருப்பம் எழவே, அவர் அதை பறிக்க சென்றார். ஆனால் ஆச்சர்யமாக அந்த மலர் அவரை விட்டு நகர்ந்து சென்றது. பல முறை முயன்றும் அவரால் அதை தொட முடியவில்லை, ஆத்திரம் கொண்டவராக தன் வாளை எடுத்து அந்த தாமரையின் மீது வீசினார்.
வாள் சுக்கு நூறாக உடைந்து, அதில் ஒரு துண்டு குளத்திலிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தது. குளமெங்கும் உதிரம் பெருக்கெடுத்தது. இதை கண்டு மயங்கிய மன்னனுக்கு காட்சி கொடுத்த சிவபெருமான் மன்னனை அருளினார். புஷ்பத்திலிருந்து அய்யன் தோன்றியதால் புஷ்பரதேஸ்வரர் என்ற பெயருண்டு.
மேலும் தன் மனைவியான சஞ்சனா தேவியை தன்னோடு சேர்த்து வைக்க வேண்டி சூரிய தேவன் நேரில் இங்கு வந்து சிவபெருமானை தரிசித்தார் என்பது புராணக்கதை. மேலும் சித்திரை ஆரம்பத்தில் இங்கே உச்சி கால பூஜைகள் நடைபெறுவதில்லை. காரணம் சூரிய தேவனே இங்கே நேரில் வந்து சிவபெருமானுக்கு பூஜை செய்கிறார் என்பது ஐதீகம். அந்த நாட்களில் சூரியவொளி மூலவர் மீது விழுவதை நாம் காண முடியும்.
நவகிரகங்களின் தலைவனான சூரிய தேவன் இங்கிருப்பதால் மற்ற நவகிரகங்களுக்கு இங்கே ஆலயம் இல்லை. மேலும் எந்த கிரகத்தின் பிரச்சனை இருப்பவர்களும் இங்கு வந்து வணங்கலாம் என்பது நம்பிக்கை. கன்வ மஹரிஷியின் இறுதி நாட்கள் இந்த ஸ்தலத்தில் தான் அமைந்தது.