பிரம்மபுரீஸ்வரர் -தோணியப்பர் கோவில் சீர்காழி
சீர்காழியில் திருத்தலம் பெரும் புராண பின்புலம் கொண்டது. இந்துகளின் புனித தலமாக கருதப்படுகிறது மேலும் இக்கோவில் சிதம்பரத்திலிருந்து கும்பகோணம் வருகிற வழியில் அமைந்திருக்கும் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது. இது தேவார ஸ்தலங்களில் 14 ஆவது ஸ்தலமாகவும் காவேரி ஆற்றிற்க்கு அருகிலும் அமைந்துள்ளது.
இக்கோவிலின் தனிச்சிறப்பே இங்கே சிவன் மூன்று வடிவங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது. ஒன்று லிங்க வடிவிலும் மற்றொன்று விஸ்வரூப வடிவில் உமையாள் உமாதேவியுடனும் இறுதியாக சத்தைநாதர் பைரவராகவும் இங்கே காட்சியளிக்கிறார். இந்த மூன்று வடிவங்களும் மூன்று வேறுபட்ட தளங்களில் அமைந்திருப்பது இத்திருக்கோவிலின் தனித்துவம். சில படிகள் ஏறிய பின்னரே தோணியப்பரையும் உமாதேவியையும் ஒருவரால் தரிசிக்க முடியும். மீண்டும் அங்கிருந்து சில படிகள் ஏறினால் மட்டுமே சத்தையப்பரை தரிசிக்க முடியும்.
இந்த கோவிலின் மொத்த வடிவமைப்பையும் ஒருவரால் இத்திருத்தலத்தின் விமானத்திலிருந்து பார்கிற போது கண்டு களிக்க முடியும்.
பிரம்ம தேவர் இத்திருத்தலத்தில் வந்து சிவபெருமானை வழிபட்டார் என்பதாலேயே கருவறையிலிருக்கும் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். திருவிக்ரமர் தன்னுடைய ஆணவத்தை மூன்று லோகத்திலும் காட்டி வந்த வேளையில் அதை அடக்கியவர் சத்தைநாதர். இத்திருத்தலத்தில் ஒவ்வொரு வெள்ளி இரவும் சத்தைநாதருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
எல்லாவற்றிற்க்கும் மேலாக இந்த புண்ணிய ஸ்தலத்தில் தான் திருஞானசம்பந்தருக்கு அன்னை உமாதேவி ஞானப்பால் புகட்டினார். உமையாள் பார்வதி இத்திருத்தலத்தில் திருநிலை நாயகி என்ற பெயரில் அழைக்கப்படுகிறாள்.
ஞானப்பால் உண்ட அக்கணமே, "தோடுடைய செவியன், விடையேறியென " தன் பதிகத்தை இங்கேயே பாடித்துவங்கினார் ஞானசம்பந்தர். இன்றும் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பால் பிரசாதம் தினசரி வழங்கப்படுகிறது.
பிரமாண்டமான பரந்து விரிந்து பரப்பளவை கொண்டிருக்கும் இக்கோவிலில் அமைதியும் அழகும் புற உலகம் குறித்து சிந்திக்க விடாமல் உள்நிலையில் கவனம் செலுத்த செய்யுபவை. ஆன்மீகத்தின் ருசியை ஒருவர் உணர வேண்டுமெனில் அவசியம் இத்திருத்தலத்தை வாழ்வில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும்.
இந்த கோவிலுக்கு எப்படி செல்லலாம், இந்த கோவில் கும்பகோணத்திலிருந்து 25 கி.மீ தள்ளி அமைந்திருக்கிறது. ஏராளமான பேருந்துகள் கும்பகோணத்திலிருந்து இருக்கின்றன.