பூஜைகளில் வாழைப்பழம் மற்றும் தேங்காய் வைத்து வழிபடச் சொல்வது ஏன்?

Update: 2022-05-26 01:46 GMT

நம் மரபில் இறைவனை வழிபடுகையில் சிறிய அளவு பூஜை தொடங்கி பெரியளவு பூஜை வரையில் வாழைப்பழமும் தேங்காயையும் வைத்து வழிப்படுவதை பார்த்திருப்போம். பழ வகைகளில் எத்தனையோ பழமிருக்க ஏன் வாழைப்பழத்தையும் தேங்காயையும் வழிபட வேண்டும்.

எல்லா பழங்களும் ஒவ்வொரு தனித்துவத்துடன் இருக்கின்றன. படையலின் போது அனைத்து பழங்களை வைத்து வழிபட்டாலும் கூட எந்த பழங்களும் இல்லாத இடத்து தேங்காய் வாழை வைத்து வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.

எளிமையான மக்களால் கூட இந்த பழக்கம் கடைப்பிடிக்கபட்டு வருகிறது. எனில் அப்படியென்ன தான் காரணம் என்று ஆராய்ந்து பார்க்கையில், வலையில் கிடைத்த தகவலின் படி வாழைபழம் என்பது எந்த வகையிலும் விதையாக செயல்படுவதில்லை. மற்ற பழங்களை நாம் வீசினால் அதிலிருக்கும் விதையின் மூலம் மீண்டும் அதே போன்ற ஒரு பழம் பிறப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

ஆனால் வாழை என்பது அப்படியல்ல, வாழைப்பழத்தை தோலுரித்தோ அல்லது உரிக்காமலோ நாம் வீசினாலும் அதிலிருந்து இன்னொரு பழம் என்பது சாத்தியமில்லை. எனவே நம் ஆன்மீக மரபின் முக்கிய நோக்கமே பிறவாமை வேண்டும் முக்தி தான். அந்த முக்தியை, பிறவாமையை உணர்த்துகின்ற பழமாக இருப்பதால் வாழைபழத்தை இறைவனுக்கு அர்பணிக்கும் பழக்கம் நம் மரபில் வந்தது .

அதை போலவே தேங்காய் பழமும், தேங்காயை ஶ்ரீபழம் என்று அழைக்கும் பழக்கமும் உண்டு. காரணம் அதன் புனித தன்மை. வாழையை போலவே இதுவும் விதையிலிருந்து பிறப்பதல்ல, யாரொருவர் வீசுகிற பழத்திலிருந்தும் தேங்காய் முளைத்துவிடாது, மாறாக தென்னங்கன்றை நட்டே இந்த பழத்தை பெற முடியும், அதை போலவே வாழையும் அதன் மரம் ஈனும் கன்றிலிருந்தே அடுத்த பழங்களை உற்பத்தி செய்து தருகிறது.

ஆனால் மற்ற பழங்கள் எல்லாம் முறையாக விதையிட்டு விளைபவை என்றாலும், யாரேனும் உண்டுவிட்டு போட்ட விதையிலிருந்து கூட விளைந்து வந்திருக்கலாம். எனவே பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படாத, புனிதம் கடுகளவும் குறையாத இந்த இரு பழங்களும் பூஜைக்கு உகந்ததாக கருதப்படுகிறது.

நம் முன்னோர்கள் ஒவ்வொன்றையும் அர்த்தத்துடனே வடிவமைத்திருக்கிறார்கள் என்பதற்கு இது போல் ஏராளமான சான்றுகள் கிடைக்கின்றன்.

Similar News