வாகனங்களின் முன் எலும்பிச்சை மற்றும் மிளகாய் கட்டும் பழக்கம் ஏன் உள்ளது?
மாபெரும் கலாச்சார பின்னனியை, பாரம்பரிய பின்புலத்தை கொண்டது நம் நாடு. நம் நாட்டில் பின்பற்ற பழக்க வழக்கங்கள் அந்தந்த மாநிலத்திற்கும், மக்களுக்கும் ஏற்றாற் போல மாறுபடும். ஆனால் அடிப்படையில் நம் அனைவரையும் இணைக்கிற மையக்கோடு இருப்பதும் அனைவரும் அறிந்ததே.
அந்த அடிப்படையில் ஒரு சில பழக்க வழக்கங்களை இன்றைய கால கட்டத்தில் நாம் மூடபழக்கம் என சொல்லிவிடுகிறோம். ஆனால் சற்று ஆராய்ந்ந்து பார்த்தால் இன்று அது தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் அதற்கான தேவை இருந்திருப்பதை நாம் உணர முடியும்.
பரிணாம வளர்ச்சி என்பதே தேவையற்றவை காலத்திற்கேற்ப தன்னை மாறுதலுக்கு உட்படுத்த்துவது தானே. ஆனால் ஒரு சில பழக்க வழக்கங்கள் மட்டும் மாறுதலுக்கு உட்படவும் இல்லை, அதே வேளையில் அது எதற்காக உருவாக்கப்பட்டது என்கிற அர்த்தத்தையும் நாம் மறந்து விட்டோம்.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போவது வர மிளகாயை நம் மரபில் கண் திருஷ்டிக்காக பயன்படுத்துவது ஏன் என்பதை. திருஷ்டி மட்டுமின்றி இன்னும் பல இடங்களில் வர மிளகாயை பயன்படுத்தும் பழக்கம் நம்மிடையே இருக்கிறது. உதாரணமாகா யாராவது நோய்வாய் பட்டிருந்தால் அவர்களின் படுக்கைக்கு கீழே ஐந்து மிளகாய்களை எரித்து அந்த துகள்களை வெள்ளை துணியில் கட்டி வைப்பத்தை பார்க்கிறோம். இதன் மூலம் உடல் நலம் குன்றியவர் எழுந்து வருவார் என்பது நம்பிக்கை.
மற்றொரு ஆச்சர்யமான பழக்கம் வாகனங்களின் முன் எலும்பிச்சை மற்றும் வரமிளகாய் கட்டுவது. எதற்காக இப்படியொரு பழக்கம் என ஆராய்ந்தால் முன்னொரு காலத்தில் வாகனங்கள் செல்கிற பகுதி கரடு முரடானதாக, அழுக்கும் அபாயமும் நிறைந்ததாக இருந்திருக்கும். மேலும் பலவித விஷப்பூச்சிகள் இருந்திருக்கும். இப்படியான சூழலில் வாகனத்தில் செல்பவரை ஏதேனும் பூச்சி அல்லது பாம்பு தாக்கினால் தாக்கிய பூச்சிகளின் தன்மையை கண்டறிய இந்த எலும்பிச்சை மற்றும் வரமிளகாயை பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
அதாவது விஷமுள்ள பாம்பு தீண்டினால், ஒரு மனிதனின் நரம்பு மண்டலம் தாக்கப்படும், அப்போது நாவிலுள்ள நரம்புகள் வேலை செய்யாது அச்சமயத்தில் நாம் உண்ணும் உணவின் சுவையை ஒருவர் உணர முடியாது, அப்போது இந்த எலும்பிச்சை மற்றும் மிளகாயின் புளிப்பும் காரமும் ஒருவர் உணர்கிறாரா என்பதை பொருத்து அவரின் சிகிச்சை அமைந்திருந்தது என்றொரு தகவல் நமக்கு கிடைக்கிறது.