வேதங்கள் அனைத்தும் வந்து வணங்கிய அதிசய கோவில்! வேதராண்யேஸ்வரர் ஆலயம்

Update: 2022-05-30 01:52 GMT

தமிழ்நாட்டில் நாகபட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது வேதாரண்யம். இங்கிருக்கும் வேதாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு திருமறைகாடார் கோவில் என்ற திருப்பெயரும் உண்டு. தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்று. அதே வேளையில் ஏழு திருமுறையிலும் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே கோவில் இது என்பது கவனிக்கத்தக்கது.

கோவிலின் திருக்கதவுகள் தாள் திறக்கவும் மூடவும், அப்பரும், சம்பந்தரும் பதிகம் பாடப்பெற்ற இடம் இது என்பது குறிப்பிடத்தக்கது. திருப்புறம்பியம் போரில் வெற்றி கண்டதன் நினைவாக காவிரி ஆற்றங்கரையோரத்தில் ஆதித்ய சோழன் வரிசையாக கட்டிய கோவிலில் ஒன்று தான் இந்த வேதாரண்யேஸ்வரர் ஆலயம்.

இங்குள்ள மூலவரின் திருப்பெயர் வேதவணேஸ்வரர், அம்பாளின் பெயர் வேத நாயகி. வேதநாயகி அம்மைக்கு மற்றொரு பெயரும் உண்டு. யாழை பழித்த மொழியாள் என்பதே ஆகும். அதாவது சரஸ்வதி தேவியின் வீணை ஒலியை காட்டிலும் இனிமையான மொழியாள் என்பதே இதன் பொருளாகும். இதன் குறியீடாக்கவே இங்கிருக்கும் சரஸ்வதி தேவி கையில் வீணைக்கு பதிலாக சுவடியேந்தி இருப்பதை நாம் காண முடியும்.

அய்யனின் பெயர் வேதவணேஸ்வரர் என்பதாலேயே இவ்வூருக்கு வேதாரண்யம் என்று பெயர். இந்த இடத்தை முந்தைய காலத்தில் திருமறை காடு என்றழைத்தனர். வேதங்களுக்கு எல்லாம் மூலமாக திகழ்ந்த இடம் என்பதே இதன் பொருளாகும். நம் புராணங்களின் படி வேதங்கள் அனைத்தும் ஒன்றுகூட்டி இறைவனை தரிசித்து இந்த இடத்திற்கு வேதாரண்யம் என்ற பெயரை வழங்கி சென்றனர். செல்கையில் இக்கோவிலின் திருக்கதவை தாளிட்டு சென்றுவிட்டனர். இதனால் ஊர் மக்கள் வேறொரு பாதை வழியாக சென்று இறைவனை தரிசித்து வந்தனர். இதை கண்டு அப்பரும் சம்பந்தரும் வேதங்கள் வழிபட்ட சுவாமியை நாமும் நேரே சென்று வழிபட வேண்டும் என்று கூறி கோவிலின் திருக்கதவு திறக்க அப்பரும், கோவிலின் கதவுகள் திறந்து மூடுமாறு சம்பந்தரும் பதிகம் பாடினர்.

இக்கோவிலில் உள்ள வேத தீர்த்தம் அல்லது மணிகர்ணிகை தீர்த்தம் மிகவும் மகத்துவம் வாய்ந்த ஒன்று. இந்த கோவில் தீர்த்தத்தில் இராமயணப்போரில் இராவணனை அழித்த பாவம் போக இராமரே நீராடினார் என்ற குறிப்பும் உண்டு. இன்றும் கோவிலின் அருகில் இராமர் பாதம் என்ற இடம் வழிபடப்படுவதை நாம் காண முடியும். அத்தகைய மகத்துவம் வாய்ந்த தீர்த்ததில் நீராடினால் புனித நதிகளில் நீராடிய புண்ணிய கிட்டும். 

Similar News