வாழ்வியல் வழிகாட்டுதலுக்கு சுக்கிர நீதி கூறுவது என்ன?

Update: 2022-06-02 02:02 GMT

சுக்ராசார்யா என்பவர் நம் புராணங்களின் படி பெரும் அறிஞர் மட்டுமல்ல அறிவார்ந்த ஞானியும் ஆவார் . அவருடைய வழிகாட்டுதல்கள், பொன்மொழிகளை சுக்ரநீதி என்று இன்றும் அழைப்பதுண்டு. மனித வாழ்வின் வாழ்வியலுக்கு தேவையான பல நல்ல கருத்துகளை, அறம் சார்ந்த வழிகாட்டுதல்களை அவர் வழங்கியுள்ளார். அந்த வகையில் ஒரு மனிதர் பிறரிடம் சொல்லவே கூடாத ரகசியங்கள் என்னென்ன என்பதை விளக்கியுள்ளார்.

நீங்கள் மற்றவரால் அதிகம் நேசிக்கவும், மதிக்கவும் படுபவர் எனில் அதனை அப்பட்டமாக வெளியே காட்டி கொள்ளக்கூடாது. இவ்வாறு செய்வது நம் மீது இருக்கும் மரியாதை குறைப்பதாக அமைந்துவிடும் என்கிறார். அடுத்து நாம் வாழ்வில் அந்தரங்கமாக பட்ட அவமானங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதால் நம்முடைய அவமானம் இன்னும் வளருமே அன்றி குறையாது. எனவே அவமானங்களை பிறரிடம் பகிர்வது கூடாது.

உங்களுக்கென மந்திர தீக்‌ஷை ஏதேனும் வழங்கப்பட்டு, அதனை நீங்கள் வழிபாட்டிற்கான ரகசிய மொழியாக வைத்திருந்தால். அதனை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். தீக்‌ஷை என்பதே மிகவும் தனிப்பட்ட ஒரு அம்சம். அதனை பொதுவெளியிலோ அல்லது பிறரிடமோ பகிர்கிற போது அதனுடைய வலிமையை அந்த மந்திரம் இழக்ககூடும் அல்லது உங்கள் பிரார்த்தனைகள் பலவீனமடையக்கூடும்.

அடுத்ததாக தம்மிடம் இருக்கும் பொருளாதார நிலையை தேவையற்ற இடங்களில் பகிரக்கூடாது. இது பணம் இல்லாதவர்களுக்கு ஒருவித ஏக்கத்தை ஏற்படுத்தும். அந்த ஏக்கமே நமக்கான நேர்மறையான ஆற்றலாக மாறலாம், அல்லது பிறருக்கு நம் மீது பொறாமை தோன்றலாம். எனவே நம்மிடம் இருக்கும் பண நிலவரத்தை தேவையின்றி பிறரிடம் பகிர்வது பாதுகாப்பானது அல்ல.

அடுத்து வயது, வயதிற்கும் நம் திறமைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவே நம்மிடம் வயது கேட்கப்படும் வரை, நாமாக முன்வந்து அதனை சொல்லத் தேவையில்லை. அடுத்து கிரகநிலை அமைப்பு, நம்முடைய ஜாதகத்தையே நாம் அடிக்கடி ஜோதிடரிடம் கொடுத்து பலன் கேட்க கூடாது என்பார்கள். நம் கிரக நிலையை அடிக்கடி சோதிப்பது நல்லதல்ல. அந்த வகையில் நம்முடைய கிரக நிலை எப்படியிருக்கிறது என்பதை பிறரிடம் தேவையின்றி பகிரத்தேவையில்லை. இது நம் கிரகநிலையின் அமைப்பை பாதிக்குமே அன்றி எந்த நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

;பிறருக்கு அளிக்கும் தானத்தை தேவையில்லாத இடங்களில் பகிரக்கூடாது. பெருமைக்காகவோ, தன்னை தானே உயர்த்தி கொள்ளவோ செய்த தானம் அது எந்த வகையான தானமாக இருப்பினும் அதனை பகிர்வதால், நாம் செய்த தானத்தின் முழு பயனைக்கூட நாம் பெற இயலாமல் போகலாம்.  

Similar News