வீட்டு விசேஷங்கள் மற்றும் கோவில்களில் செவ்வந்தி மலர்களால் தோரணம் அமைப்பது ஏன்?
பொன்னை வைக்க வேண்டிய இடத்தில் அதற்கான வசதியில்லை எனில் பூக்களை வைக்கலாம் என்பார்கள். பூ என்பது அத்துனை புனிதமானது. மலரின் இதம், மணம் தன்மை போன்றவைகளால் அவை மிக உயர்வான இடத்தை இந்த உலகத்தில் பெற்றுள்ளன. வாழ்கின்ற நாட்கள் குறைவெனினும் அதன் மலர்களுக்கு இருக்கின்ற புனிதத்துவம் அலாதியானது.
மனதை சுண்டி இழுக்கிற அதன் வண்ணங்களும், மனதில் தெய்வீகத்தை பரப்புகிற அதன் மணமும் நம்மை மற்றொரு உலகிற்கு அழைத்து செல்லக்கூடியவை. அதனால் தான் இறைவனை துதிக்கின்ற பூஜைகள், வழிபாடுகளில், மலருக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால் எல்லா விதமான மலர்களையும் எல்லா தெய்வத்திற்கும் வழங்கிவிடலாமா எனில், அவ்வாறு செய்ய இயலாது. குறிப்பிட்ட மலர்களை குறிப்பிட்ட கடவுளுக்குத்தான் அர்பணிக்க முடியும்.
உதாரணமாக துளசியை சிவனுக்கு அர்பணிக்க முடியாது. ஆனால் விஷ்ணுபெருமானுக்கு மாலையாக கட்டி இடலாம். வில்வத்தை சிவனுக்கும், அருகம்புல்லை விநாயகருக்கும், சிவப்பு நிற மலர்களை தேவியருக்கும் அர்பணிக்கலாம். அந்த வகையில், கடவுளுக்கு அர்பணிக்கும் மலர்களில் தனக்கென ஒரு இடத்தை பெற்றிருப்பது செவ்வந்தி மலர்கள்.
ஒருவர் தொடர்ச்சியாக இறைவனுக்கு செவ்வந்தி மலர்களை வைத்து வணங்குவதால் ஏற்படும் ஆச்சர்ய பலன் யாதெனில், அவருடைய ஆணவம் மற்றும் அகங்காரம் மெல்ல மெல்ல அழியும் என்பதே. ஒரு விதையினுள் இருந்து மலர்கிற இந்த மலரானது, அட்டுக்கடுக்கான இதழ் அமைப்பை கொண்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு தனி மனிதர் எத்தனை விதமான சூழல் இருந்தாலும் ஆன்மீகம் எனும் மையப்புள்ளியில் அவர் ஒன்றிணைந்து இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
அதை போலவே செவ்வந்தியின் மற்றொரு தனித்தன்மை யாதெனில், மற்ற மலர்களை போல் அல்லாமல் அதனுடைய சொந்த இதழ்களை கொண்டே அதனால் மற்ற மலர்களை மரு உருவாக்கம் செய்ய முடியும். இது கர்மாவின் அடிப்படையை குறிக்கிறது. நாம் செய்யக்கூடிய செயல்களே கர்ம வினைகளாக மாறி பின் அதற்கு தகுந்தாற் போலான மற்றொரு வடிவை நாம் எடுக்கிறோம் என்பதை உணர்த்துகிறது.
வீடுகள், விஷேசங்கள் மட்டுமல்லாமல் கோவில்களிலும் கூட தோரணம் அமைக்க முதலில் இந்த மலருக்கே முன்னுரிமை அளிப்பார்கள். இந்த மலர் கொடுக்கும் வித்யாசமான நறுமணத்தால், எந்தவித தீய சக்திகளும் வீட்டினுள் அண்ட முடியாது. இந்த மலர் அனைத்து விதமான தீய சக்திகளையும் தடுத்து நிறுத்தும். மேலும் இதனுடைய நறுமணமானது அதன் இதழ்கள் வாடினாலும் கூட புத்துணர்வுடன் வீசும் என்பது குறிப்பிடத்தக்கது. தான் வருந்தினும் பிறருக்கு நன்மையை அளிக்கும் இந்த புனித தன்மைகளால் இறைவனுக்கு உகந்த மலராய் இருக்கிறது செவ்வந்தி.