பெருமாளின் திவ்ய தேசங்களுள் ஒன்று நேபாளில் இருக்கும் ஆச்சர்யம்!

Update: 2022-06-09 01:54 GMT

நேபாள நாட்டின் முஸ்தாங் மாவட்டம் அமையப்பெற்ற இமயமலையில் உள்ளது முக்திநாத் பள்ளதாக்கு, அங்கு அமைந்திருப்பது தான் முக்திநாத் கோவில். 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இந்த இடம். உலகின் உயரமான இடத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் பெளத்தர்கள் இணைந்து வணங்கும் புனிதத்தலம்.

வைணவர்களின் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக முக்திநாத் கோவில் கருதப்படுகிறது. விஷ்ணுவின் சொரூபமாக திகழ்வது சாளக்கிராமம். இது ஒரு கல் வகை. இந்த கோவில் அமைந்துள்ள கண்டகி நதியில் இந்த சாளக்கிராமம் கல் அதிகமாக கிடைக்கிறது.

ஒரு முறை விஷ்ணு ஜலந்திரன் என்ற அரக்கனை அழிக்க முற்படுகையில், அவனுடைய பதிவிரதை மனைவியான பிருந்தையை ஏமாற்றி ஜலந்திரனை அழித்ததால் கோபமுற்ற பிருந்தை கல்லாக போவீர் என்று அளித்த சாபத்தால். சாளக்கிராமமாக மாறினார் என்றும். பிருந்தையின் பதிவிரத தன்மையை மெச்சி வழங்கிய வரத்தில், தேவர்கள் பார்கடலை அமிர்தம் வேண்டி கடைகிற போது மஹா விஷ்ணுவின் கண்களிலிருந்து நீர் துளிகள் உதிரும். அந்த கண்ணீர் துளிகள் நிலத்தில் விழுகிற போது துளசியாக மாறும். அந்த துளசி தான் பிருந்தை என வரம் அளித்தாராம்.

இங்குள்ள முக்தி நாதரை தரிசித்தால் பிறப்பு இறப்பு ஆகியவையிலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை. காலையில் இந்து முறைப்படியும் மாலையில் பெளத்த முறை படியும் பூஜை நடப்பது இக்கோவிலின் சிறப்பு. காரணம் இந்து வைணவர்களுக்கு இது எப்படி புண்ணிய தலமோ அதை போலவே பெளத்தர்கள், முக்திநாத் திருத்தலத்தை நூறு புனித நீர்நிலைகள் என போற்றி வழிபடுகின்றனர்.

திருமங்கையாழ்வாரும், பெரியாழ்வாரும் முக்திநாதரை போற்றிப்பாடி மங்களாசாசனம் செய்துள்ளனர். இக்கோவிலின் மற்றோர் சிறப்பாக இங்கே இராமனுஜருக்கு விக்ரகம் உண்டு. மற்றும் பெருமாளின் பக்கத்தில் உள்ள புத்தர் சிலையும் உண்டு.

கோவிலுக்கு பின்புறம் 108 தீர்த்தங்கள் வழிகின்றன. இவற்றில் குளித்தவாறே ஒருவர் கோவிலை வலம் வரலாம்.

ஆண்டின் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை முக்திநாதரை தரிசனம் செய்ய ஏற்ற இடமாக கருதப்படுகிறது. கடும்குளிர், கடுமையான பாதைகள் என்ன ஏராளமான சவால் நிறைந்த திருத்தலம். எனவே இந்த முக்திநாதரை தரிசிக்க வேண்டுமெனில், அளப்பரிய உடல் பலமும், மனோபலமும் தேவை.

கடந்த 2018 ஆம் ஆண்டில் நேபாளத்திற்கு சுற்று பயணம் சென்ற போது, நம் பாரத பிரதமரும் இங்கு சென்று வழிபட்டார் என்பது கூடுதல் தகவல் . 

Similar News