இலட்சுமி தேவியின் பரிபூரண அருளை வழங்கும் கும்பகோணத்தின் ஆச்சர்ய ஆலயம்

Update: 2022-06-12 02:53 GMT

சாரங்கபாணி திருக்கோவில் விஷ்ணு பெருமானுக்கு அர்பணிக்கப்பட்ட தலமாகும். தமிழகத்தில் கும்பகோணத்தில் அமைந்துள்ளது இக்கோவில். இந்த கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகும். அது மட்டுமின்றி, ஆழ்வார்களால் நாலாயிர திவ்யபிரபந்தத்தில் மங்களாசனம் செய்யப்பட்ட தலம். காவேரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இக்கோவில், பஞ்சரங்க சேத்திரங்களுள் ஒன்று.

இக்கோவிலின் இராஜகோபுரம் 11 அடுக்குகளை கொண்டது. இதன் உயரம் 173 அடி ஆகும். இக்கோவிலின் மேற்கு வாசலுக்கு எதிராக அமைந்துள்ளது இக்கோவிலின் தீர்த்தமான பொற்றாமரை குளம். சித்திரை மாதத்தில் இக்கோவிலில் நிகழும் தேரோட்டம் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். இரட்டை கோவில் அமைப்புடன் விளங்கும் இக்கோவிலின் தேர் தமிழக தேர்களுள் மூன்றாம் பெரிய தேர் என்ற பெருமையை கொண்டது.

இக்கோவில் குறித்து சொல்லப்படும் தல வரலாறு யாதெனில் ஒரு முறை பிருகு முனிவர் ஒரு சோதனையின் பொருட்டு மகா விஷ்ணுவின் மார்பில் உதைத்தார். ஆனால் விஷ்ணு கோபம் கொள்ளவில்லை. அப்போது அவர் மார்பில் குடியிருந்த இலட்சுமி தேவி கோபமடைந்தார். அதனை காரணமாக கொண்டு மகா விஷ்ணுவையும் பிரிந்தார். பூலோகம் வந்தார் அப்போதும் அவருடைய கோபம் தீராததால், அவருடைய கோபத்திலிருந்து விடுபட பூமிக்கடியில் ஒளிந்து கொண்டார். அவர் ஒளிந்திருந்த இடம் இன்று பாதாள சீனிவாச சந்நிதி என்றும் கோபம் தணிந்து அவர்கள் திருமணத்திற்கு சுவாமி தரிசனம் தந்த இடம் மேட்டு சீனிவாசர் சந்நிதி என்றும் அழைக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி பிருகு முனிவர் தன் தவறை உணர்ந்து அன்னையிடம் மன்னிப்பு வேண்டினார். அதுமட்டுமின்றி இலட்சுமி தேவியே தன் மகளாக பிறக்க வேண்டும் என்று வேண்டினார். அந்த வேண்டுதலின் படி, மற்றொரு பிறவியில் பிருகு முனிவர் ஹேமரிஷியாக பிறந்த போது அவருக்கு மகளாக இன்றிருக்கும் பொற்றாமரை குளத்தில் ஆயிரக்கணக்கான தாமரைகளிடையே இலட்சுமி தேவி, கோமளவல்லியாக தோன்றினார் பின்பு விஷ்ணுவும் இலட்சுமியும் மணந்தனர் என்பது வரலாறு.

அதுமட்டுமின்றி கையில் வில்லுடன் விஷ்ணு பெருமான் தோன்றியதால் அவருக்கு சாரங்கபாணி என்று பெயர். சாரங்கம் என்றால் வில் என்று பொருள். மற்ற கோவில்களில் இருப்பதை போல இங்கே சொர்க வாசல் இல்லை காரணம் இக்கோவிலை சுவாமி நேரே வைகுண்டத்திலிருந்து இங்கே வந்தார் என்றும். இக்கோவிலை தரிசித்தாலே ஒருவருக்கு முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோவில் இலட்சுமி தேவி கோமளவல்லியாக அவதரித்த தலம் என்பதால் இக்கோவிலில் முதல் மரியாதை தேவிக்கே. 

Similar News