மனித வாழ்வின் அனைத்து அங்கத்திலும் தெய்வீக அருளை வழங்குபவராக கணபதியிருக்கிறார். இந்து மரபில் அனைத்து விதமான துயர்களையும் துடைப்பவராக, முழு முதற் கடவுளாக இருப்பவர் கணபதி. இவரை பெரிய சிரத்தைகள் ஏதுமின்று நாம் வழிபட முடியும். மஞ்சளை பிடித்து வழிபட்டாலும் நம் வழிபாட்டை ஏற்று கொள்ளும் கருணை உள்ளம் கொண்டவர். எந்தவொரு பண்டிகையிலும், சுபகாரியத்திலும் இவரை வணங்காமல் எதுவும் தொடங்கப்படுவதில்லை.
பக்தர்கள் எதை கேட்டாலும் தருகின்ற அருள் கடவுளாக இருக்கும் விநாயகரின் அருளை கூடுதலாக பெற அவருக்கு பிடித்தமானவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
மோதகம் அல்லது கொழுக்கட்டை என்று சொல்லக்கூடிய பிரசாதம் விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது, மற்றும் அவருக்கான பூஜைகளில் இதனை வைப்பது அவரின் அருளை ஈர்க்க பேருதவியாக இருக்கும். வட இந்தியாவில் ஒரு நம்பிக்கை உண்டு, ஹோலி பண்டிகைக்கு அடுத்த நாளில் விநாயகரின் திருவுருவத்திற்கு குங்குமத்தை அர்பணித்தால் தீராத வினையும் தீருமாம்.
அன்றைய நாளில் இந்த சடங்கினை செய்யும் பக்தர்கள் அதிகாலை எழுந்து, நீராடி மஞ்சள் நிற ஆடைகளை உடுத்தி விநாயகருக்கான வழிபாட்டில் குங்குமத்தை அர்பணிக்கின்றனர். அதுமட்டுமின்றி வாஸ்து ரீதியாக சொல்லப்படும் நம்பிக்கை யாதெனில், இந்த நாளில் குங்குமத்தை நெய்யுடன் கலந்து அல்லது மல்லிகை எண்ணையுடன் கலந்து தங்கம் அல்லது வெள்ளி பொருட்களில் தடவி இருந்தால் பொருளாதாரம் மற்றும் தொழில்சார்ந்த பிரச்சனைகள் தீரும் என்கின்றனர்.
இதனையும் தாண்டி, விநாயகருக்கு பிடித்தமானது எருக்கம் பூ. இந்த எருக்கம்பூவிற்கு ஒரு மனிதரை சுற்றியுள்ள எதிர்மறையான விஷயங்களை அழிக்கும் தன்மை உண்டு. அதே நேரத்தில், இந்த பூவினால் ஒருவரின் மனதிலிருக்கும் தீய எண்ணங்களும் அழிந்து போகும் என சொல்லப்படுகிறது. எருக்கம் பூ மாலையை விநாயகருக்கு சாற்றி, குங்குமம் அர்பணித்து வணங்கினால் அவர் சகல விதமான நோய்களையும், வினைகளையும் தீர்த்தருளுவார் என சொல்லப்படுகிறது. வெள்ளை நிற பூக்கள், வாழை இழை, வாழை பழம் போன்றவை கணபதிக்கு விருப்பமானவை. வெள்ளை நிற கணபதியை வணங்குவது பொருளாதார மேன்மைக்கான வழிபாட்டில் பெரும் உதவியாக இருக்கும். அவருடைய படத்தை வீடுகளில் ஓட்ட வைத்தால் கூட திருவுருவத்தை வழிபடுவதற்கு இணையான பலனை பெற முடியும்.